Thursday, July 24, 2008

மாங்காட்டில் தவக்கோலம்


ஒம் சக்தி

மாங்காடு ஸ்ரீ காமாக்ஷியம்மன்இன்று ஆடி மாத இரண்டாம் வெள்ளி எனவே மாங்காட்டில் தவம் புரியும் காமாக்ஷியம்மனின் தரிசனம் பெறுவோம்.மாங்காடு என்னும் மகத்தான புண்ணியத்தலம்


ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் "மாங்காடு" என்னும் காரணப் பெயர் பெற்றது. "மாவை" என்றும் அழைக்கப்படுகின்றது, "சூதவனம்", “ஆம்ராரண்யம்" போன்ற சிறப்புப் பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் தவம் புரிந்து , பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயொரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை இது. மாங்காடு ஸ்ரீ காமாக்ஷியம்மனின் மகிமை இத்தன்மையது. இனி மாங்காடு என்னும் மகத்தான புண்ணியத் தலத்தின் எழில் கொஞ்சும் காமாக்ஷியைக் காண வாருங்கள்.

மாங்காட்டில் ஸ்ரீ காமாக்ஷி


லக மாந்தர்களை உய்விக்க அந்த அகிலாண்ட நாயகனும் நாயகியும் நடத்தும் திருவிளையாடல்கள் பல, அவற்றுள் ஒன்றுதான் முப்பதிரண்டு அறங்களையும் நாம் அறியும் பொருட்டு அந்த ஜகத் ஜனனி ஜகன்மாதா தானே பூலோகத்தில் வந்து அவற்றை நமக்கு செய்து காட்டருளி சிவ பூசை செய்த திருவிளையாடல். ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது ஞானப் பூங்கோதையாம் எம் அன்னை சிறு குழந்தையைப் போல விளையாட்டாக சூரிய , சந்திரர்களான அந்தப் பித்தனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது .மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர். இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான். இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் ஆம்ரவனமாம் இந்த மாங்காட்டுப்பதியிலே வந்து அவதரித்தாள்.

அன்னையின் தவக்கோலம்


மாங்காட்டிலே காமாக்ஷியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முணையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள் அன்னை. இதனால் அம்மை இத்தலத்திலே "தபசு காமாக்ஷி" என்று அழைக்கப்படுகின்றாள்.


ஆதி காமாஷி, தபசு காமாக்ஷி, அர்த்த மேரு ஸ்ரீசக்ரம்


ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரியும் மலையரசன் மகளுமான தன் தேவியின் மேல் கருணை கொண்ட செஞ்சடையோன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி தருகிறார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறுகின்றார்.

தெற்கு இராஜகோபுரம், மாங்காடு

ஆம்ரவனத்தில் தவம் இருந்த அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு செல்கிறார். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வரலானாள். பின்னர் கம்பாநதியை பெருகிவரச் செய்து தழுவக்குழைந்த நாதராகி பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். இவ்வாறு மாங்காட்டிலே தவக்கோலம் காட்டிய பண்டாசுரனை அழித்த அம்பிகை அதனால் காஞ்சியிலே மணக் கோலம் காட்டி “கல்யாண காமாட்சி " யாக அருள் பாலிக்கின்றாள்.


ஸ்ரீ அர்த்த மேரு ஸ்ரீ சக்ரம்பவளம் போல் மேனியனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால் , தான் தவத்திற்க்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்க மாட்டாமல் தவித்தார்கள் நிலங்கள் வற்றிப் போயின. கால்நடைகள், மக்கள் மற்றும் அனைத்து ஜ“வராசிகளும் செய்வதறியாமல் திகைத்தன.

அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கர பகவத் பாதாள் வந்தார். தேசாந்திரமாக வந்து கொண்டிருந்த அவர் மாங்காடு பிரதேசத்தை அடைந்த போது மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன " அஷ்ட கந்தம்" அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

மாங்காடு பிரகாரத்தின் கூரையில் உள்ள ஸ்ரீசக்ரம் (சுதை சிற்பம்)இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை(கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது. எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்ரத்தை ஆதி சங்கர பகவத் பாதாள் உருவாகியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது. இத்திருக்கோவிலில் ஸ்ரீ சகரத்திற்கே முக்கிய பிரதானம். குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாக்ஷி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றான. தபஸ் காமாக்ஷி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான " ஆதி காமாக்ஷி" அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு. அவ்வாறே இங்கும் காமாக்ஷி அம்மனுக்கு பிரதானமான தனி ச்ன்னதி உள்ளது. மாவடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

ஆறு வார வழிபாடு

இத்தெய்வீகத் திருத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் எலுமிச்சம் கனியுடன் அம்மனைத் தரிசித்து, பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள்(அதாவது ஒரு மண்டலம்) அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடுகிறது. அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து, பின்னர் அதன் பயனால் காஞ்சியில் மணக்கோலம் கொண்டமையால், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர், ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்யம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்கு தொட்டில் கட்ட அன்னை அருள் புரிவாள். பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கானோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். இங்கு புதிதாகச் செய்யப்பட்டுள்ள தங்க ரதம் தமிழகத்திலேயே உயரமானதாக விளங்குகிறது.அம்மன் சரஸ்வதியுடனும், லக்ஷ்மியுடனும் தங்கத் தேரில் வலம் வரும் அழகே அழகு.முதல் வாரத்தின் போது வெற்றிலை, பாக்குடன் தேங்காயும், பூ பழத்துடன் கற்பூரத்தையும் இத்துடன் இரண்டு எலுமிச்சை கனிகளையும் சேர்த்து அம்மன் சன்னதியில் அர்ச்சனை செய்தல் வேண்டும். அர்ச்சனை செய்த பின்னர் தேங்காய் பிரசாதத்துடன் ஓர் எலுமிச்சை மட்டும் தருவார்கள். மற்றது அம்மனுடன் இருக்கும், நம் கையில் கொடுத்த பழத்தை தினமும் பூஜித்து வருதல் வேண்டும். இரண்டாம் வாரம் சென்ற வாரம் கொடுத்த எலுமிச்சையும் புதியதாக இரண்டையும் சேர்த்து மூன்றாக சன்னதியில் கொடுக்க வேண்டும். இதே போல ஐந்து வாரங்கள்முடிந்ததும், ஆறாவது வாரத்தில் முதல் வாரத்தைப் போல் தேங்காய் சகிதத்துடன் ஒரு புஷ்ப மாலையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு நன்கு காய்ச்சிய பாலுடன் கற்கண்டு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், தேன் முதலியவற்றைச் சேர்த்து அம்மனுக்கு நிவேதனம் செய்து அப்பாலை அங்குள்ள அனைவருக்கும் வினியோகம் செய்தல் வேண்டும். மாங்காட்டிலே தனியான ஒரு மாமரத்தடியிலே அம்மன் தவம் செய்யும் போது அவருக்கு ஆகாரம் பால் மட்டுமே அதனால் தான் இன்றும் ஆறு வார வழிபாட்டின் நிறைவின் போது அனைவருக்கும் பால் வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதுவே ஆறு வார வழிபாட்டு முறை.

ஆதி காமாக்ஷி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மற்ற நாட்களில் காலையில் ஒரு தடவை அபிஷேகம் நடைபெறுகின்றது. அந்த அபிஷேகத்திற்கு, உபயம் செய்பவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே அம்மனின் மகிமை விளங்கும். வெள்ளி மற்றும் பௌர்ணமி தினங்களில் மாலை ஊஞ்சல் சேவை நடைபெருகின்றது. மேலும் சித்திரையில் தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வைகாசியில் வைகாசி விசாகம், ஆனியில் ஆனித் திருமஞ்சனம், ஆடியில் ஆடிப் பூரம், ஆவணியில் ஆவணித் திருவோணம், புரட்டாசியில், நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மை வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருகின்றாள், பௌர்ணமியன்று நிறைமணிக் காட்சி தருகின்றாள் அன்னை. ஐப்பசி மாதம் அன்னபிஷேகமும், கார்த்திகையில் கார்த்திகை தீபமும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும், தையில் தைப் பூசமும், மாசியில் மஹா சிவ ராத்திரியும், மாசி மகமும், பங்குனியில் தெலுங்கு வருடப் பிறப்பும், பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டடப்படுகின்றன.


ஸ்ரீ வெள்ளீஸ்வரர்

ஸ்ரீ காமாக்ஷ’ அம்மன் திருக்கோவிலைப் போலவே தொன்மையானது. ஸ்ரீ பார்க்கவரேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர், பார்க்கவ முனிவர் எனப்படும் சுக்ராச்சாரியாரால் வழிபாடு செய்யப்பட்டவர். இவ்வாலயத்தில் ஒரே கல்லில் வடிக்கப் பட்டுள்ள வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ முருகப் பெருமானையும், மாங்கனியை கையிலேந்திய ஸ்ரீ வினாயகரையும் தரிசிக்கலாம். ஆலயத்தின் விமானம் அழகிய வேலைப்படுகளால் ஆனது, ஒரு குன்றைப் போன்றும், தேரைப் போன்றும் காட்சி தருகின்றது. சோழர் காலத்தியது. சுக்ர பகவான் வணங்கியதால் சுக்ர வழிபாடு சிறப்பானது.

ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்


ஸ்ரீ வைகுண்டப் பெருமாளின் ஆலயமும் ஸ்ரீ காமாக்ஷ’ அம்மனின் ஆலயத்திற்க்கு அருகில் பொலிவுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ தேவி பூதேவியுடன் அமர்ந்த நிலையில் , அந்த அலையாழி அரி துயிலும் மாயன் தன் தங்கையின் திருமணத்திற்கு சீதனமாக கையில் கணையாழியுடனும், வீற்றிருக்கும் நிலையில் சேவை சாதிக்கின்றார். பெருமாளின் அருகிலே மார்க்கண்டேய முனிவர் தவக்கோலத்தில் காட்சி தருகின்றார். தாயாருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் பெருமாள் பிரயோகச் சக்கரத்துடன் சேவை சாதிக்கின்றார். பிரயோக சகக்ரத்துடன் பெருமாளை சேவிப்பதால் செய்வினை தோஷங்கள், சத்ருக்கள் தொல்லை, பொறாமையினால் பிறர் தரும் துன்பங்கள் விலகும். மற்றும் கருடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிகின்றார். தங்கை கல்யாணம் முடியும் வரை பெருமாள் காத்திருப்பார் என்பதால் கருடன் அமர்ந்ததாக ஐதீகம்.
இதுவல்லாமல் புனிதத்தலமான இம்மாங்காட்டுத் தலத்தில் ஸ்ரீ கைலாச நாதர், ஸ்ரீ பாலாண்டேஸ்வரர், ஸ்ரீ வேம்புலியம்மன், ஸ்ரீ மாந்தியம்மன் சன்னதிகளும் அழகுற அமைந்துள்ளன. இதுகாறும் என்னோடு எழில் காஞ்சும் காமாக்ஷ’யின் புண்ணியத்தலமான மாங்காட்டைப் சுற்றி வந்த நீங்கள் நாவாற அவள் நாமம் சொல்லி மாங்காடு சென்று அவள் திருப்பாதம் பணிந்து அளவற்ற அருளினைப் பெற்று, ஆனந்த வாழ்வினை பெறுவீர்களாக என்று பிரார்த்திக்கிறேன்.

ஒம் சக்திSunday, July 20, 2008

கர்ப்பரட்சாம்பிகை


கரு காக்கும் நாயகி கர்ப்பரட்சாம்பிகை

ஐந்தொழில்களையும் புரியும் எம் அம்மை, பெண்களுக்கென்றே தந்த தனி சிறப்பான "உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்கும்" தாய்மைப் பேற்றை அடையும் பெண்களின் கருவை சிதையாமல் காக்கும் கருகாத்த நாயகியாய் ஒரு தலத்தில் எழுந்தருளி அருள் புரிகின்றாள். கர்ப்பகால ஆபத்துக்கள், பேறு கால கோளாறுகள் நீங்கப் பெற்று சுகப்பிரசவம் வேண்டியும் , திருமணம் கூடிவருவதற்கும், குழந்தை பாக்கியம் பெற வேண்டியும் இத்தலத்து இறைவியிடம் பிரார்த்தனை செய்தால் , எல்லாம் நல்ல படியாக நடக்கின்றது. இவ்வாறு கருகாத்த நாயகியாய் எம் அம்மை எழுந்தருளியுள்ள தலம்தான்" திருக்கருகாவூர்".இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம் , தீர்த்தம் மூம்றும் சிறப்புடையது. க்ருத யுகத்தில் தேவர்களும், த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேவதைகளும் வணங்கினர். கலியுகத்தில் முனிவர்களும், மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும். அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் பொன்னி நதி பாய்வதால் வளம் செழிக்கும் தண் செய் வயல்கள் சூழ் தஞ்சை வள நாட்டிலே, பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.திருக்களாவூர் என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. தஞ்சை மண்டலத்தின் "பஞ்ச ஆரண்யத்தலங்களுள் இத்தலமும் ஒன்று" 1. முல்லை வனம் - திருகக்ருகாவூர் உஷத் காலத்தில் தரிசனம் செய்ய சிறப்பு . 2. பாதிரிவனம் - திருஅவளிவநல்லூர், காலை சந்தி , 3. வன்னி வனம் - ஹரித்துவார மங்கலம், உச்சிக்காலம் , 4. பூளை வனம் - திருஇரும்பூளை ஆலங்குடி, சாயரட்ஷை, 5. வில்வ வனம்- திருக்கொள்ளம்பூதூர் (அர்த்த சாமம்) என ஒரே நாளில் இத்தலங்களை தரிசிக்கலாம்.

இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர்,மன்னர் குசத்துவசன்,சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கர்ப்ப புரீசுவரர், கருகாவூர் கற்பகம், மஹா தேவர், முல்லிங்க மூர்த்தி என்றும் அழைக்கப்படும் எம் ஐயனின் வாகனம் நந்திகேஸ்வரர் கொடி மரத்தடியில் இரட்டைப் பிறவிகளாய் அமர்ந்திருக்கிறார்கள். இதில் ஒருவர் சுயம்பு. இத்தலத்தின் வினாயகரும் சுயம்பு மூர்த்தியே.என் ஐயனும் இங்கே சுயம்புவாக புற்றிலிருந்து தோன்றியவர் இன்றும் இறைவனின் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவைக் காணலாம். புற்று மண்ணால் ஆனவர் என்பதால் எம் ஐயனுக்கு அபிஷேகம் கிடையாது, புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகின்றது. சரும நோய் உள்ளவர்கள் சுயம்பு மூர்த்தியாம் முல்லைவன நாதருக்குப் புனுகு சட்டம் சாத்திக் குணம் பெறுவது இன்றும் நடைபெறுகின்றது. வளர்பிறை பிரதோஷ நாளில் முல்லைவன நாதருக்கு புனுகு சார்த்தி வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்.ஸ்தல விருட்சம் முல்லைக்கொடி, இது சுவாமியின் உட்பிரகாரத்தில் சண்டேஸ்வரருக்கும், திருமஞ்சன கிணற்றுக்கும் இடையே உள்ளது. முல்லைப்பந்தலின் கீழ் இருந்த சுயம்பு முல்லைவன நாதருக்கு கி.பி. 7ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கருவறைக் கட்டப்பட்டு அதன் பின் சோழர் காலத்தில் பெருங்கோவில் கட்டப்பட்டது. கி.பி, 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் காலத்தில் கற்கோவிலானது, குஞ்சர மல்லன் இராஜாதி ராஜன் காலத்தில் குடமுழுக்கு நடந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தீர்த்தங்கள்: 1. க்ஷ“ரகுண்டம் (பாற் குளம்): கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள குளம். இத்திருக்குளம் காமதேனுவின் கால் குளம்பால் கீறி உருவாக்கப்பட்ட குளம். 2. சத்திய கூபம்: சுவாமி கோவிலுக்கும், அம்பாள் கோவிலுக்கும் இடையில் உள்ளது இக்கிணறு. இதில் ஒவ்வொரு கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீ முருகப் பெருமான் தீர்த்தம் அருளுகின்றார்.3. பிரம்ம தீர்த்தம் : இது ஊருக்கு தென் மேற்கில் கற்சாலைக்கு கீழ்பக்கம் உள்ளது. மார்கழி திருவாதிரையில் நடராசப்பெருமானும் சிவகாம சுந்தரி அம்பாளும் இங்கு வந்து தீர்த்தம் அருளுகின்றனர். 4. விருத்த காவேரி: காவேரியின் கிளை நதியாகிய வெட்டாறு. "முள்ளிவாய்" என்று புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகம் பிரம்மோற்சவத்தின் போதும், பங்குனி உத்திரத்தன்றும் எம்பெருமான் தீர்த்தவாரி கண்டருளுகின்றார். ஆடிப்பூர நன்னாளில் அம்மை கர்ப்பர்ட்சாம்பிகை தீர்த்தவாரி கண்டருளிகிறார். ஞான சம்பந்தர் முத்து சிவிகையில் பதினாறாயிரம் அடியார்களுடன் எழுந்தருளி தனக்கு முத்து சிவிகை, முத்து குடை முத்துச் சின்னங்கள் அளித்த பெருமானை நினைத்து நன்றிப் பெருக்கோடு திருகருகாவூர் பதிகத்தில் முத்து என்ற சொல்லை மங்கள சொல்லாக வைத்து பாடியுள்ள பாடல் தான்முத்தி லங்குமாறு வல்லுமை அஞ்சவேமத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்கத்தை போர்த்தகட வுள் கரு காவூர்எம்அத்தர் வண்ணம்அழ லும் அழல் வண்ணமேஎன்ற பாடல், "கருகாவூரிற் கற்பகத்தை காண்டற்கரி கதிர் ஒளியை "என்று பாடிய திருநாவுக்கரசர் ஆகியோர்களின் பாடல் பெற்ற தலம். சுந்தரர் பாடியுள்ள ஊர்த்தொகை பதிக இடையிலும் வைத்து போற்றப்பட்டுள்ளது. மற்றும் பெரிய புராணம், உமாபதி சிவம் பாடியுள்ள "சிவ ஷேத்திர சிவ நாம கவி வெண்பா"விலும் ராமலிங்க அடிகளாரின் "விண்ணப்பக் கவி வெண்பாவிலும்" இடம் பெற்றுள்ளது.
இனி புராண காலத்தில் கரும்பனையாள் அம்மன் என்று அழைக்கப்பட்ட அம்மை கருக்காத்த நாயகி (எ) கர்ப்பரக்ஷ‘ம்பிகை என்னும் பெயர் பெறக் காரணமான வரலாற்றைப் பார்ப்போமா? புராணங்களின் படி இத்தலத்தில் தவம் செய்த கௌதமர், கார்க்கேயர் என்ற முனிவர்களுக்கு, நிருத்துவரும் அவரது மனைவி வேதிகையும் பணிவிடை செய்து தமது மகப்பேறு இல்லாத குறையை இவர்களிடம் தெரிவிக்க, இவர்களும் முல்லை வன நாதரையும் அம்பாளையும் வழிபடக் கூறினர். நிருத்துவரும் அவ்வாறே செய்ய இறைவன் மனமிரங்கி மகப்பேறு அருளினார். வேதிகையும் சூல் கொண்டார்.ஒரு சமயம் வருண லோகத்தில் நடைபெறும் ஒரு யாகத்திற்கு நிருத்துவர் சென்றிருந்த போது, ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அவரது ஆசிரமத்தை நாடி வந்து, தமது பசிக்கு உணவு கேட்டார். அவரது குரல் கேட்டபோதிலும் வேதிகை, கர்ப்ப தளர்ச்சி மிகுதியால் எழுந்து வந்து அன்னம் படைக்க முடியவில்லை. அது அறியாத முனிவர் கோபமுற்று, வேதிகைக்கு "இராசியட்சு" என்னும் நோயால் வருந்துமாறு சாபமிட்டு அகன்று விட்டார். அதன் பயனால் வேதிகையின் கருக்கலைந்தது. வேதிகை கண்­ர் மல்கி "கரும்பனையாலம்மையை" மனமுருகி வேண்ட கருணைக் கடலாம் என் தாய் கலைந்த கருவை ஒரு கடத்துள் ஆவாகனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்து காப்பாற்றி , நைத்துருவன் என்ற குழந்தையாகக் கொடுத்தாள். குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பி, பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால் குளம் தோன்றியது. அது ஆலயத்திற்கு முன்புறம் ஷ”ரகுண்டம் என்று இன்றும் இருந்து வருகின்றது.இறைவியின் அருட்திறத்தை கண்டுணர்ந்த வேதிகையும், நிருத்துவ முனிவரும் அம்பாளிடம், "தாயே தாங்கள் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாகவே எழுந்தருளி, உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்திக்க அம்மையும் அவ்வண்ணமே அருள் பாலித்தாள். அன்று முதல் தன்னை நாடி வரும் அனைவரின் கர்ப்ப கால துன்பங்களையும் நீக்கி காத்து வருகின்றாள் அன்னை.அம்பாள் சன்னதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு வந்தால் கன்னியர்க்கு மணமாகும்.குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அப்பேறு பெறுவர். திருமணமாகி பல ஆண்டுகளாய் குழந்தை இல்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து நெய் மந்திரித்து தரப்படும். இதனை தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர அம்பாளின் கருணை கடாட்சத்தால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கையும் நடப்பும் ஆகும். சுகப் பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்து தரப்படுகின்றது. பிரசவ வலியின் போது வயிற்றில் தடவ, சுகப்பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமுற வாழ்வர். இவ்வாறு குழந்தைப் பேறு பெற்றவர்கள் அனேகம் பேர் அம்மனுக்கு சேலை சார்த்துவதையும் துலாபாரமாக எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தங்கம், தானியங்கள், பழங்கள், வெல்லம், கற்கண்டு, வழங்குவதையும் பார்க்கலாம். குடும்பத்தில் வம்ச வழி தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஸ்ரீ கர்ப்பர்ட்சாம்பிகை சந்நிதிக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் "நெய் தீபம்" ஏற்றி வணங்கி வந்தால் வம்ச வழி புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.அடியேன் என்னுடன் பணி புரியும் அன்பரின் மனைவிக்கு கரு தங்குவதில் சிறிது பிரச்சினை இருந்தது. அவர் வேற்று மதத்தவர்(ஜைனர்) ஆயினும் அவர் அம்பிகையிடம் வேண்டிக் கொள்ள 12 வருடங்களுக்கு பிறகு அவ்ர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறக்க அருள் புரிந்தாள் அன்னை கர்ப்பர்க்ஷ‘ம்பிகை இது எனது சொந்த அனுபவம். தாங்களும் முழு மனதுடன் அம்பிகையை வழிபட உங்கள் துன்பங்களையும் தீர்த்து வைப்பாள் அன்னை. இத்தலத்தில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.ஆடிப்பூரமும், நவராத்திரியும் அம்மனுக்கு சிறப்பான விழா நடக்கின்றது. நவராத்திரியின் போது லட்சார்ச்சனை நடந்து வருகின்றது. அதில் கலந்து பிரார்த்தனையில் அருளாசி பெற்று இம்மை மறுமை ப்லன்களை அடையலாம். மற்றும் ஆருத்ரா தரிசனம், மஹா சிவராத்திரி , பிரதோஷம், ஐப்பசி பௌர்ணமி நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முருகருக்கு ஸ்கந்த சஷ்டி விழா சிறப்பாக நடக்கின்றது.பௌர்ணமியில் கிரிவலம் நடைபெறுகின்றது, கார்த்திகை தீபம், கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது.

இனிதிருக்கோவில் அமைப்பைப் பார்ப்போமா? கிழக்கில் இராஜ கோபுரம், தென்பக்கம் ஒரு வாயில் உள்ளது. கோவிலுக்கு எதிரே காமதேனு உருவாக்கிய பாற்குளம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் பெரிய பிரகாரத்தில் சுவாமி சந்நிதியும் இதம் வடப்பக்கம் கரும்ப்னையாலம்மை சந்நிதியும் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு முன் கொடி மரம், பலி பீடம், நந்தி உள்லது. தென் கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து நாயன்மார்கள், வடகிழக்கில் நடராஜர் சபா மண்டபம், யாக சாலை உள்ளது. வடகிழக்கே நடராஜர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும், தென் பக்கம் சோமாஸ்கந்தர் சந்நிதியும் அருகில் ஸ்தல முக்கிய சுயம்பு வினாயகரான கற்பக வினாயகர் சந்நிதியும் உள்ளது. முதலில் இவரை வணண்க்கிப்பின் அம்மை அப்பரை வணங்கவேண்டுமென்பது ஐதீகம்.உட்பிரகாரத்தில் நடராஜருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்ந்தியும், தென் பாகம் தட்சிணாமூர்த்தி, நிருத்ய கணபதிசந்நிதி, மேற்புரம் அர்த்த நாரீசுவரர், மஹாலக்ஷ்மி சந்நிதியும், வடபுரம் ஆறுமுகப்பெருமான், பிரம்மன், ஸ்ரீ துர்க்கை சந்நிதியும், சண்டேசுரர் மற்றும் தல விருட்சமும் உள்லது. அம்பிகையின் சந்நிதியில் ஒரு தனிக்கோவிலாக கௌதமேஸ்வர லிங்கம் பூஜைக்குரியதாக உள்ளது தனிச்சிறப்பு ஆகும்.உள்ளே நந்தவனத்துடன் கோவில் மிகவும் தூய்மையாக இருந்தது.அடியேன் இக்கோவிலுக்கு சென்ற போது கிடைத்த மன அமைதி போல எப்போதும் அனுபவித்ததில்லை. கிராமம் என்பதனாலோ என்னவோ கோவிலில் கூட்டம் இருந்தும் கூட ஒரு அமைதி நிலவியது.இத்தலத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்1. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்..தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம்முல்லைவனம் கூடல், முதுகுன்றம் - நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.2. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.3.பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத்தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப்பெற்றார்.4. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான்.

5.கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்த்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது. கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.6. மன்னன் குசத்துவன் காட்டில் வேட்டையாடும் போது சத்திய முனிவரின் சாபத்தால் கொடும்புலி உருப் பெற்று சத்திய கூப தீர்த்தத்தில் நீராடு சுய உருப் பெற்றான்.7. சங்கு கர்ணன் என்னும் அந்தணன் விந்தியா குருஷன் மகளை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் சாபப்படி பேயுருப் பெற்றான். பின் முன் வினைப்பயனால் இத்திருத்தல எல்லையை அடைந்ததும் பேயுரு நீங்கப்பெற்றான்.8. இத்தலத்தின் சோமாஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் உற்சவ மூர்த்திகள் மிகவும் அழகு வாய்ந்தவை. மேலும் பூத —ரியும், யானையும், நந்தியும் மிகவும் அழகு வாய்ந்தவை.

கோவிலின் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீசுவரர் மிகுந்த பொலிவுடன் உள்ளார். நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும், குதிரையும் காண்க் கண் கோடி வேண்டும். 9. இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார். நான்மணி மாலை, இரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர் கோவிந்தசாமிப்பிள்லையும், வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷ’தரும் பாடியுள்ளார். அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ். வைத்திநாதன் பாடியுள்ளார். என்ன இப்போதே கிளம்பிவிட்டீர்களா? எம் அன்னையை தரிசித்து அவள் அருளைப்பெற,* * * * * * * * * *


Labels: , ,

Saturday, July 19, 2008

சிறுவாச்சூர் மதுர காளியம்மன்இந்த மூன்றாம் ஆடி வெள்ளியன்று திருச்சிக்கு அருகில் சிறுவாச்சூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மதுர காளியம்மன் தரிசனம் பெறுவோம்.ஓதும் வேத உட்பொருளாவாய் தாயே மதுர காளி
உலகம் காக்க சிறுவாச்சூரில் ஒளிரும் தாயே மதுரகாளி
கசப்பில் இனிமை கலந்துற வாடும் காளித்தாயே சிறுவாச்சூரில் உந்தன்
கழல் பணிந்தாரைக் கை தூக்கும் கருணை உள்ளதாயே மதுரகாளி
.
காலம் என்பதன் தெய்வீக வடிவமே காளி. இறைவி தன் பக்தர்களை காத்து அருளுவதுடன், தீயவர்களை அழிக்கவும் செய்கின்றார். இவ்வாறு தீமைகளை, அதர்மத்தை அழிப்பதற்கான ரூபமே காளி . இதையே சமஸ்கிருதத்தில் "துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன" என்று கூறுவார்கள். இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!.
காளி தேவியின் வழிபாடு வட மாநிலங்களிலே அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது. மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இன்னல்களைத் தந்த அசுரர்களை வதைத்து ஒழிக்கும் கோபமே உருவான தேவதையாகவே காளி தேவி வணங்கப்படுகின்றாள்.

ஸ்ரீ மஹா விஷ்ணு பாற்கடலிலே மாயத் துயிலில் ஆழ்ந்திருந்த போது அவரது காதிலிருந்து தோன்றிய மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவை துன்புறுத்த, ஆதி பராசக்தி ஆனவள் அந்த அசுரர்களை அழிக்க மஹா மாயாவாக உருவெடுத்து விஷ்ணுவின் உறக்கத்தை கலைக்க இருவரையும் விஷ்ணு சம்ஹாரம் செய்தருளினார். மீண்டும் மஹ’சாசுரன், சும்பன்,நிசும்பன் என்ற அரக்கர்களையும் அழிக்க தேவர்களின் அம்சமாக அவர்களின் ஆயுதங்களையெல்லாம் பதினெட்டுத் திருக்கரங்களிலே ஏந்தி துர்கா பரமேஸ்வரியாக அவர்களை வதம் செய்தாள் அன்னை.

பின்னர் சும்ப நிசும்பர்களின் தளபதிகளான சண்ட முண்டர்களையும் தேவி எதிர்த்த போது தேவியின் நெற்றியிலிருந்து கருமையான நிறத்துடன் மிகவும் கோரமான உருவம் தாங்கி முகத்தில் மூன்று கண்களுடனும் , கட்கம், சக்கரம், கதை, வில், அம்புகள், சூலம், உலக்கை போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி மஹா காளி ஆவிர்பவித்தாள். சண்ட முண்டர்களின் தலையை வெட்டி தேவியின் காலில் சமர்பித்து சாமுண்டி ஆனாள். மேலும் சும்ப நிசும்பர்களுக்கு துணையாக நின்ற ரக்த பீஜன் பிரம்மாவிடம் ஒரு அரிய வரம் பெற்றிருந்தான். அவனுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஒரு புதிய அரக்கன் தோன்றுவான் என . போரின் போது தேவி இவனை சமாளிக்க அரக்கனின் ரத்தம் கீழே விழாதவாறு காளியை பருகுமாறு தேவி கூற , ஆயிரக்கணக்கன நாக்குகளை எடுத்து காளி அரக்கனின் ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பருகியதால் தேவியால் ரக்த பீஜனை எளிதாக கொல்ல முடிந்தது.


சிவபெருமானைப் போலவே காளியும் அக்னி அம்சம் எனவே தான் உக்ர அம்சமான தேவிகளான காளியம்மன், மாரியம்மன், பிடாரி, அங்காளம்மன் முதலியோரின் சிலைகளின் கிரீடம் " ஜ்வலா மகுடம் " என்னும் அக்னி ஜ்வாலை வடிவாக வடிக்கபடுகின்றன. அப்படிப்பட்ட கோவில்களிலேதான் அக்னி சட்டி எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன.


தமிழ் நாட்டிலே தில்லை, திருவாலங்காடு, உறையூர், மற்றும் சிறுவாச்சூரிலே காளியாக அன்னை சிறப்பாக கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றாள். சிறுவாச்சூர் என்னும் திருத்தலத்திலே மதுர காளியாக எழுந்தருளி அருள் பாலிக்கும் அந்த அன்னையின் பெருமைகளைப் பற்றி அறிந்து கொள்வோமா?


சீர் மதுர காளிதனை சிந்தையில் வைத்திடப்
பேர் விளங்கும் நற்பேறும் பெற்றிடலாம்- யார்க்கும்
கருணை புரிவாள் கழல் பற்ற நெஞ்சே
சிறுவாச்சூர் ஆலயமே சேர்.

மூர்த்தி, தலம், தீர்த்தமென முச்சிறப்பும் அமைந்த பல திருத்தலம் தான் இந்த உலகை எல்லாம் காக்கும் எம் அன்னை மதுர காளியாக எழுந்தருளி அருள் பாலிக்கும் சிறுவாச்சூர் திருத்தலம். திருச்சி சென்னை மார்க்கத்தில் பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ து‘ரத்தில் அமைந்துள்ளது இத்தலம். சுற்றிலும் மலைகளும், ஏரிகளும், சூழ வளம் கொழிக்கும் தோப்புகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றாள் அம்மை மதுர காளி.

தல வரலாறு : ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழி படும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அம்மையிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அல்லலுறும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுரை காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் இடம் கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான், தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜ“வராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் அந்த அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் மதுரை காளியாக அம்மை.

பின் செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்ளுகிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாரதரனை காட்டப்படுகின்றது. செல்லி அம்மனுக்கு குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை பிறந்தால் "பால் முடி" கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.. அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதத்திற்குள் சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்.மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக மாறியது என்று நம்பப்படுகின்றது. சினங்கொண்டு இங்கு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

இத்தலத்தின் மற்றொரு ஐதீகம், அம்பிகையே சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவர்க்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் அடைந்தபோது அமைதி கொண்ட அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானள் என்பது செவிவழிச் செய்தி.
சிறுவாச்சுருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது, தங்க கவசம் சார்த்திய பின் அன்னையின் திவ்ய உருவம் தன் எப்படி ஜொலிக்கின்றது பாருங்கள் ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள் பொழியும் திருமுக மண்டலத்துடன், வலது மேற் கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அக்ஷ்ய பாத்திரமும் தாங்கி, மார்பிலே ரத்ன பதக்கமாட,பொன் தாலியும், காதிலே தடாகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், பாதட்திலே சிலம்பும் மின்ன, தன் வாகனமாம் சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சி தராமல் அருளும் நிலையிலே தரிசனம் தருகின்றாள் அம்மை. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.
சிறியத் திருக்கோவில், முன்புறம் இராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் முன்னே நமக்கு வலப்பக்கம் ஓர் ஏரியும், இடப்பக்கம் ஒரு குளமும் உள்ளன. திருக்குளம் ஆதி சங்கரரால் உருவாக்கப்பெற்றது. துறையூர்க் கோட்டையின் குறுநில மன்னர்கள் கோயிலை எழுப்பினர். கோவிலின் உட்சென்றவுடன் இடப்புறம் ஒரு மண்டபமும் அதன் எதிரில் ஒரு கிணறும் உள்ளது.

ஆண்டு தோறும் சித்திரை திங்களில் அமாவாசைக்கு அடுத்த செவ்வாயன்று அம்மனுக்கு பூச்சொரிதல் தொடங்குகின்றது, அதற்கடுத்த செவ்வாயன்று காப்புக்கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகின்றது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கியத் திருவிழாவாகும். மேலும் ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி பதினெட்டாம் பெருக்கு, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசியில் மஹா சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் திருக்கோவில் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றது.

அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் .ஒரு முறை அம்மனை தரிசனம் செய்தவர்களை மறுபடியும் மறுபடியும் தன்னிடம் ஈர்க்கின்றாள் அன்னை. எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சன்னதி. பூசை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் 1 1/2 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

அங்க பிரதக்ஷணம் அம்மனுக்கு ஒரு சிறந்த பிரார்த்தனை. மற்றுமொறு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு. வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள்.

பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன. குழந்தைப் பேறும் கிட்டுகின்றது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக அன்னை மதுர காளி ஆட்சி செய்து வருகின்றாள். சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்க்கு எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள். தல விருட்சம் மருத மரமாகும் தீர்த்தம் ஈசான திலையில் உள்ள திருக்குளமாகும்.
தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணைத் திறத்தால் நல்லன நல்கி நலமான வாழ்வமைத்து தரும் மதுர காளியம்மனை சிறுவாச்சூர் தலம் சென்று

கொற்றவள் எங்கள் குலக்கொடி செல்வக்குமரனை முன்
பெற்றவள் வேதப் பெருமையள் ஞானப் பெருந்தவத்தள்
கற்றவர் போற்றும் கவின் சிறுவாச்சூர் கவழவருள்
உற்றவள் ஐயை மதுர காளி உமையவளே!

என்று மனமுருகி வழிபட்டு நன்மையடைவோமாக.
ஆதாரம்: திருக்கோவில் தலவரலாற்று நூல்.
* * * * * * *

Labels: , , ,

Thursday, July 17, 2008

காளிகாம்பாள் ( கோடி மாதம் கிடைத்தாலும் ஆடி மாதம் கிடைக்காது)கோடி மாதம் கிடைத்தாலும் ஆடி மாதம் கிடைக்காது அம்பிகையை வழிபட என்பது ஆன்றோர் வாக்கு. தக்ஷிணாயன புண்ணிய காலத்தின் ஆரம்ப மாதமான இந்த ஆடி மாதத்தில் நம்பிக்கையோடு அம்பிகையை வழிபட வாழ்க்கை சிறக்கும் என்பது நிச்சியம்.

இன்றைய தினம் (18-07-08) ஆடி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பௌர்ணமி இணைந்து வந்துள்ளது ஆகவே அம்மன் தரிசனம் அனேக கோடி புண்ணியம். இன்று குரு பூர்ணிமா கூட 18 புராணங்களை தொகுத்து மஹா பாரதமும் எழுதிய விஷ்ணு ரூப வியாச பகவானை வழிபடும் நாள், தத்தம் குருக்களிடம் ஆசி பெரும் நாள். இந்நன்னாளில் அம்பிகை சென்னயில் காளிகாம்பாளாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம்.
*****
கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்

காளிகாம்பாள் மூலவர்


கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவில். கமடேஸ்வரி, கோட்டையம்மன், சென்னியம்மன், நெய்தல் நில காமாட்சி என்றும் ஆயிரம் திருநாமம் அம்பாளுக்கு இத்தலத்தில். மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் முதலிய புராணங்களில் இத் திருக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வாருங்கள் இத்திருகோவிலின் பெருமைகளை பார்ப்போம்.அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.


காளிகாம்பாள் உற்சவர்தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷியாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.

மிகவும் புராதனமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷியாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.


ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்

கலைமக்ளே திருமக்ளே மலைமகளே
காலை கதிரொளியே!
குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்
கலைக்கடலே கருணை ஈவாய்
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்
சேர்ந்தன போல் சிவமும் தாயும்
அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல
அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று. "ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷ'ண சேவிதா" என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.


தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம். பிராட்வேயில் சுதேச மித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போது மஹாகவி பாரதியார்


யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் - நின்றன்
செயல்களின்றி இல்லை
போதும் இந்த மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே - என் மீது
அருள் புரிந்து காப்பாய்


என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன தர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.


அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது. சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு.மேலும் கோவிலின் உள்ளேயே குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.

நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம்.  ஆர்மேனியன் சாலையயும்  தம்பு செட்டிதெருவையும் இனைக்கும் வண்ணம் கோவில் அமைந்துள்ளது.  மேற்கிலும் கிழக்கிலும் கோபுரங்கள் உள்ளன. தெற்கு பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வீர பத்திரருடன் அன்னை காளியும் அருள் பாலிக்கின்றாள். வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. அருகில் வேத மாதா காயத்ரிக்கும் ஒரு சன்னதி.   பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.ஸ்ரீசக்ர நாயகிக்கு கிண்ணித் தேர்
வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.
பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்


உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள்  சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியன்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது. அவரை

ஓம் சத்யோஜாத முகாய பிரம்மதேவனே நம:ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:
ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:
என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் வணங்குகின்றனர்.நாளெல்லாம் திருநாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை. ஆனியிலே வசந்த விழா. அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா. தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நு‘தன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள.
பிரம்மோற்சவத்தின் போது 7ம் நாள் பூத்தேர் கமடேஸ்வரிக்குஅம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர் அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி . தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சென்னையில் குடி கொண்டிருக்கும் காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் கோட்டையம்மன்.

* * * * * * *

Labels: , , ,

  • Other Articles
  • Unicode enable