கர்ப்பரட்சாம்பிகை
கரு காக்கும் நாயகி கர்ப்பரட்சாம்பிகை
ஐந்தொழில்களையும் புரியும் எம் அம்மை, பெண்களுக்கென்றே தந்த தனி சிறப்பான "உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்கும்" தாய்மைப் பேற்றை அடையும் பெண்களின் கருவை சிதையாமல் காக்கும் கருகாத்த நாயகியாய் ஒரு தலத்தில் எழுந்தருளி அருள் புரிகின்றாள். கர்ப்பகால ஆபத்துக்கள், பேறு கால கோளாறுகள் நீங்கப் பெற்று சுகப்பிரசவம் வேண்டியும் , திருமணம் கூடிவருவதற்கும், குழந்தை பாக்கியம் பெற வேண்டியும் இத்தலத்து இறைவியிடம் பிரார்த்தனை செய்தால் , எல்லாம் நல்ல படியாக நடக்கின்றது. இவ்வாறு கருகாத்த நாயகியாய் எம் அம்மை எழுந்தருளியுள்ள தலம்தான்" திருக்கருகாவூர்".
இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம் , தீர்த்தம் மூம்றும் சிறப்புடையது. க்ருத யுகத்தில் தேவர்களும், த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேவதைகளும் வணங்கினர். கலியுகத்தில் முனிவர்களும், மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும். அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் பொன்னி நதி பாய்வதால் வளம் செழிக்கும் தண் செய் வயல்கள் சூழ் தஞ்சை வள நாட்டிலே, பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
திருக்களாவூர் என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. தஞ்சை மண்டலத்தின் "பஞ்ச ஆரண்யத்தலங்களுள் இத்தலமும் ஒன்று" 1. முல்லை வனம் - திருகக்ருகாவூர் உஷத் காலத்தில் தரிசனம் செய்ய சிறப்பு . 2. பாதிரிவனம் - திருஅவளிவநல்லூர், காலை சந்தி , 3. வன்னி வனம் - ஹரித்துவார மங்கலம், உச்சிக்காலம் , 4. பூளை வனம் - திருஇரும்பூளை ஆலங்குடி, சாயரட்ஷை, 5. வில்வ வனம்- திருக்கொள்ளம்பூதூர் (அர்த்த சாமம்) என ஒரே நாளில் இத்தலங்களை தரிசிக்கலாம்.
இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர்,மன்னர் குசத்துவசன்,சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கர்ப்ப புரீசுவரர், கருகாவூர் கற்பகம், மஹா தேவர், முல்லிங்க மூர்த்தி என்றும் அழைக்கப்படும் எம் ஐயனின் வாகனம் நந்திகேஸ்வரர் கொடி மரத்தடியில் இரட்டைப் பிறவிகளாய் அமர்ந்திருக்கிறார்கள். இதில் ஒருவர் சுயம்பு. இத்தலத்தின் வினாயகரும் சுயம்பு மூர்த்தியே.என் ஐயனும் இங்கே சுயம்புவாக புற்றிலிருந்து தோன்றியவர் இன்றும் இறைவனின் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவைக் காணலாம். புற்று மண்ணால் ஆனவர் என்பதால் எம் ஐயனுக்கு அபிஷேகம் கிடையாது, புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகின்றது. சரும நோய் உள்ளவர்கள் சுயம்பு மூர்த்தியாம் முல்லைவன நாதருக்குப் புனுகு சட்டம் சாத்திக் குணம் பெறுவது இன்றும் நடைபெறுகின்றது. வளர்பிறை பிரதோஷ நாளில் முல்லைவன நாதருக்கு புனுகு சார்த்தி வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்.ஸ்தல விருட்சம் முல்லைக்கொடி, இது சுவாமியின் உட்பிரகாரத்தில் சண்டேஸ்வரருக்கும், திருமஞ்சன கிணற்றுக்கும் இடையே உள்ளது. முல்லைப்பந்தலின் கீழ் இருந்த சுயம்பு முல்லைவன நாதருக்கு கி.பி. 7ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கருவறைக் கட்டப்பட்டு அதன் பின் சோழர் காலத்தில் பெருங்கோவில் கட்டப்பட்டது. கி.பி, 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் காலத்தில் கற்கோவிலானது, குஞ்சர மல்லன் இராஜாதி ராஜன் காலத்தில் குடமுழுக்கு நடந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
தீர்த்தங்கள்: 1. க்ஷ“ரகுண்டம் (பாற் குளம்): கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள குளம். இத்திருக்குளம் காமதேனுவின் கால் குளம்பால் கீறி உருவாக்கப்பட்ட குளம். 2. சத்திய கூபம்: சுவாமி கோவிலுக்கும், அம்பாள் கோவிலுக்கும் இடையில் உள்ளது இக்கிணறு. இதில் ஒவ்வொரு கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீ முருகப் பெருமான் தீர்த்தம் அருளுகின்றார்.3. பிரம்ம தீர்த்தம் : இது ஊருக்கு தென் மேற்கில் கற்சாலைக்கு கீழ்பக்கம் உள்ளது. மார்கழி திருவாதிரையில் நடராசப்பெருமானும் சிவகாம சுந்தரி அம்பாளும் இங்கு வந்து தீர்த்தம் அருளுகின்றனர். 4. விருத்த காவேரி: காவேரியின் கிளை நதியாகிய வெட்டாறு. "முள்ளிவாய்" என்று புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகம் பிரம்மோற்சவத்தின் போதும், பங்குனி உத்திரத்தன்றும் எம்பெருமான் தீர்த்தவாரி கண்டருளுகின்றார். ஆடிப்பூர நன்னாளில் அம்மை கர்ப்பர்ட்சாம்பிகை தீர்த்தவாரி கண்டருளிகிறார். ஞான சம்பந்தர் முத்து சிவிகையில் பதினாறாயிரம் அடியார்களுடன் எழுந்தருளி தனக்கு முத்து சிவிகை, முத்து குடை முத்துச் சின்னங்கள் அளித்த பெருமானை நினைத்து நன்றிப் பெருக்கோடு திருகருகாவூர் பதிகத்தில் முத்து என்ற சொல்லை மங்கள சொல்லாக வைத்து பாடியுள்ள பாடல் தான்
முத்தி லங்குமாறு வல்லுமை அஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள் கரு காவூர்
எம்அத்தர் வண்ணம்அழ லும் அழல் வண்ணமே
என்ற பாடல், "கருகாவூரிற் கற்பகத்தை காண்டற்கரி கதிர் ஒளியை "என்று பாடிய திருநாவுக்கரசர் ஆகியோர்களின் பாடல் பெற்ற தலம். சுந்தரர் பாடியுள்ள ஊர்த்தொகை பதிக இடையிலும் வைத்து போற்றப்பட்டுள்ளது. மற்றும் பெரிய புராணம், உமாபதி சிவம் பாடியுள்ள "சிவ ஷேத்திர சிவ நாம கவி வெண்பா"விலும் ராமலிங்க அடிகளாரின் "விண்ணப்பக் கவி வெண்பாவிலும்" இடம் பெற்றுள்ளது.
இனி புராண காலத்தில் கரும்பனையாள் அம்மன் என்று அழைக்கப்பட்ட அம்மை கருக்காத்த நாயகி (எ) கர்ப்பரக்ஷ‘ம்பிகை என்னும் பெயர் பெறக் காரணமான வரலாற்றைப் பார்ப்போமா? புராணங்களின் படி இத்தலத்தில் தவம் செய்த கௌதமர், கார்க்கேயர் என்ற முனிவர்களுக்கு, நிருத்துவரும் அவரது மனைவி வேதிகையும் பணிவிடை செய்து தமது மகப்பேறு இல்லாத குறையை இவர்களிடம் தெரிவிக்க, இவர்களும் முல்லை வன நாதரையும் அம்பாளையும் வழிபடக் கூறினர். நிருத்துவரும் அவ்வாறே செய்ய இறைவன் மனமிரங்கி மகப்பேறு அருளினார். வேதிகையும் சூல் கொண்டார்.ஒரு சமயம் வருண லோகத்தில் நடைபெறும் ஒரு யாகத்திற்கு நிருத்துவர் சென்றிருந்த போது, ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அவரது ஆசிரமத்தை நாடி வந்து, தமது பசிக்கு உணவு கேட்டார். அவரது குரல் கேட்டபோதிலும் வேதிகை, கர்ப்ப தளர்ச்சி மிகுதியால் எழுந்து வந்து அன்னம் படைக்க முடியவில்லை. அது அறியாத முனிவர் கோபமுற்று, வேதிகைக்கு "இராசியட்சு" என்னும் நோயால் வருந்துமாறு சாபமிட்டு அகன்று விட்டார். அதன் பயனால் வேதிகையின் கருக்கலைந்தது. வேதிகை கண்ர் மல்கி "கரும்பனையாலம்மையை" மனமுருகி வேண்ட கருணைக் கடலாம் என் தாய் கலைந்த கருவை ஒரு கடத்துள் ஆவாகனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்து காப்பாற்றி , நைத்துருவன் என்ற குழந்தையாகக் கொடுத்தாள். குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பி, பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால் குளம் தோன்றியது. அது ஆலயத்திற்கு முன்புறம் ஷ”ரகுண்டம் என்று இன்றும் இருந்து வருகின்றது.இறைவியின் அருட்திறத்தை கண்டுணர்ந்த வேதிகையும், நிருத்துவ முனிவரும் அம்பாளிடம், "தாயே தாங்கள் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாகவே எழுந்தருளி, உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்திக்க அம்மையும் அவ்வண்ணமே அருள் பாலித்தாள். அன்று முதல் தன்னை நாடி வரும் அனைவரின் கர்ப்ப கால துன்பங்களையும் நீக்கி காத்து வருகின்றாள் அன்னை.
அம்பாள் சன்னதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு வந்தால் கன்னியர்க்கு மணமாகும்.குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அப்பேறு பெறுவர். திருமணமாகி பல ஆண்டுகளாய் குழந்தை இல்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து நெய் மந்திரித்து தரப்படும். இதனை தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர அம்பாளின் கருணை கடாட்சத்தால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கையும் நடப்பும் ஆகும். சுகப் பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்து தரப்படுகின்றது. பிரசவ வலியின் போது வயிற்றில் தடவ, சுகப்பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமுற வாழ்வர். இவ்வாறு குழந்தைப் பேறு பெற்றவர்கள் அனேகம் பேர் அம்மனுக்கு சேலை சார்த்துவதையும் துலாபாரமாக எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தங்கம், தானியங்கள், பழங்கள், வெல்லம், கற்கண்டு, வழங்குவதையும் பார்க்கலாம். குடும்பத்தில் வம்ச வழி தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஸ்ரீ கர்ப்பர்ட்சாம்பிகை சந்நிதிக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் "நெய் தீபம்" ஏற்றி வணங்கி வந்தால் வம்ச வழி புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
அடியேன் என்னுடன் பணி புரியும் அன்பரின் மனைவிக்கு கரு தங்குவதில் சிறிது பிரச்சினை இருந்தது. அவர் வேற்று மதத்தவர்(ஜைனர்) ஆயினும் அவர் அம்பிகையிடம் வேண்டிக் கொள்ள 12 வருடங்களுக்கு பிறகு அவ்ர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறக்க அருள் புரிந்தாள் அன்னை கர்ப்பர்க்ஷ‘ம்பிகை இது எனது சொந்த அனுபவம். தாங்களும் முழு மனதுடன் அம்பிகையை வழிபட உங்கள் துன்பங்களையும் தீர்த்து வைப்பாள் அன்னை. இத்தலத்தில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.
ஆடிப்பூரமும், நவராத்திரியும் அம்மனுக்கு சிறப்பான விழா நடக்கின்றது. நவராத்திரியின் போது லட்சார்ச்சனை நடந்து வருகின்றது. அதில் கலந்து பிரார்த்தனையில் அருளாசி பெற்று இம்மை மறுமை ப்லன்களை அடையலாம். மற்றும் ஆருத்ரா தரிசனம், மஹா சிவராத்திரி , பிரதோஷம், ஐப்பசி பௌர்ணமி நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முருகருக்கு ஸ்கந்த சஷ்டி விழா சிறப்பாக நடக்கின்றது.பௌர்ணமியில் கிரிவலம் நடைபெறுகின்றது, கார்த்திகை தீபம், கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது.
இனிதிருக்கோவில் அமைப்பைப் பார்ப்போமா? கிழக்கில் இராஜ கோபுரம், தென்பக்கம் ஒரு வாயில் உள்ளது. கோவிலுக்கு எதிரே காமதேனு உருவாக்கிய பாற்குளம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் பெரிய பிரகாரத்தில் சுவாமி சந்நிதியும் இதம் வடப்பக்கம் கரும்ப்னையாலம்மை சந்நிதியும் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு முன் கொடி மரம், பலி பீடம், நந்தி உள்லது. தென் கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து நாயன்மார்கள், வடகிழக்கில் நடராஜர் சபா மண்டபம், யாக சாலை உள்ளது. வடகிழக்கே நடராஜர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும், தென் பக்கம் சோமாஸ்கந்தர் சந்நிதியும் அருகில் ஸ்தல முக்கிய சுயம்பு வினாயகரான கற்பக வினாயகர் சந்நிதியும் உள்ளது. முதலில் இவரை வணண்க்கிப்பின் அம்மை அப்பரை வணங்கவேண்டுமென்பது ஐதீகம்.உட்பிரகாரத்தில் நடராஜருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்ந்தியும், தென் பாகம் தட்சிணாமூர்த்தி, நிருத்ய கணபதிசந்நிதி, மேற்புரம் அர்த்த நாரீசுவரர், மஹாலக்ஷ்மி சந்நிதியும், வடபுரம் ஆறுமுகப்பெருமான், பிரம்மன், ஸ்ரீ துர்க்கை சந்நிதியும், சண்டேசுரர் மற்றும் தல விருட்சமும் உள்லது. அம்பிகையின் சந்நிதியில் ஒரு தனிக்கோவிலாக கௌதமேஸ்வர லிங்கம் பூஜைக்குரியதாக உள்ளது தனிச்சிறப்பு ஆகும்.உள்ளே நந்தவனத்துடன் கோவில் மிகவும் தூய்மையாக இருந்தது.
அடியேன் இக்கோவிலுக்கு சென்ற போது கிடைத்த மன அமைதி போல எப்போதும் அனுபவித்ததில்லை. கிராமம் என்பதனாலோ என்னவோ கோவிலில் கூட்டம் இருந்தும் கூட ஒரு அமைதி நிலவியது.
இத்தலத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
1. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்..தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம்முல்லைவனம் கூடல், முதுகுன்றம் - நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.
2. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.
3.பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத்தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப்பெற்றார்.
4. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான்.
5.கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்த்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது. கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.
6. மன்னன் குசத்துவன் காட்டில் வேட்டையாடும் போது சத்திய முனிவரின் சாபத்தால் கொடும்புலி உருப் பெற்று சத்திய கூப தீர்த்தத்தில் நீராடு சுய உருப் பெற்றான்.
7. சங்கு கர்ணன் என்னும் அந்தணன் விந்தியா குருஷன் மகளை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் சாபப்படி பேயுருப் பெற்றான். பின் முன் வினைப்பயனால் இத்திருத்தல எல்லையை அடைந்ததும் பேயுரு நீங்கப்பெற்றான்.
8. இத்தலத்தின் சோமாஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் உற்சவ மூர்த்திகள் மிகவும் அழகு வாய்ந்தவை. மேலும் பூத —ரியும், யானையும், நந்தியும் மிகவும் அழகு வாய்ந்தவை.
கோவிலின் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீசுவரர் மிகுந்த பொலிவுடன் உள்ளார். நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும், குதிரையும் காண்க் கண் கோடி வேண்டும். 9. இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார். நான்மணி மாலை, இரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர் கோவிந்தசாமிப்பிள்லையும், வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷ’தரும் பாடியுள்ளார். அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ். வைத்திநாதன் பாடியுள்ளார். என்ன இப்போதே கிளம்பிவிட்டீர்களா? எம் அன்னையை தரிசித்து அவள் அருளைப்பெற,
* * * * * * * * * *
Labels: karbaratchambikai, karumbanaiyal, thirukarukavur
5 Comments:
அடியேனும் இந்தக் கோவிலுக்கு போயிருக்கிறேன், சில வருஷங்களுக்கு முன். அதனால் அவ்வளவாக நினைவில்லை. இப்போது தங்களால் அவளை மறுபடி தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மிக்க நன்றி.
திருக்கொள்ளம்புதூர் - நாங்கள் திருக்களம்பூர் என்றும் சொல்வோம் (அதுதானே?), என்னுடைய தாத்தா (அம்மாவின் பெற்றோர்) குடும்பத்தினர் கட்டிய கோவில். சமீபத்தில் கும்பாபிஷேகமும் நடந்தது.
நிறைய தகவல்கள் சேகரித்துத் தருகிறீர்கள். உங்கள் பணி சிறக்கட்டும். அன்னையின் அருள் தங்களுக்குக் கைக்கூடட்டும்.
பி.கு. இந்த பதிவும் பின்னால் போய் விட்டது, ஜூலை 20 என்ற தேதியுடன்...
really an impressive post
really an impressive blog
//திருக்கொள்ளம்புதூர் - நாங்கள் திருக்களம்பூர் என்றும் சொல்வோம் (அதுதானே?), என்னுடைய தாத்தா (அம்மாவின் பெற்றோர்) குடும்பத்தினர் கட்டிய கோவில். சமீபத்தில் கும்பாபிஷேகமும் நடந்தது.//
எவ்வளவு பாக்கியம் செய்திருக்கின்றீர்கள் ஒரு ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய மிகவும் கொடுத்து வைத்திருக்கின்றீர்கள்.
\\இந்த பதிவும் பின்னால் போய் விட்டது, ஜூலை 20 என்ற தேதியுடன்\\
பணியின் காரணமாக வீட்டில் இல்லாத காலங்களில் முன்னர் draft ஆக வைத்திருந்து என்றைக்கு பதிவிட வேண்டுமோ அன்றைக்கு புதிதாக பதிவிடுவது வழக்கம். இப்பதிவுகளை பதிவிடும் போது அவசரமாக இட்டதால் பின்னால் சென்று விட்டது.
Good observation power.
அடுத்த முறையிலிருந்து இவ்வாறு நடக்காமல் இருக்க முயற்சி செய்கின்றேன்.
Thank you very much Murali Kannan. Please do visit the blogs in future also.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home