Wednesday, October 21, 2020

கோலாகல நவராத்திரி - 4

 ஸ்ரீசண்டி மஹிமை


யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய் நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி, அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப் பெற்று, இன்பமாய் வாழலாம். சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும், நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள் என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர். ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை மற்றும் இதர உடைமைகளையும், அவனது சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு, அவனை ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச் செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து, நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து கொண்டிருந்தான்.அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என, வினவுகிறான். அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி, செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால், வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.

இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும் மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி, தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழிகாட்டியருளுமாறு வினவினர். முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு, 'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள் அகலும் என்று கூறினார். அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்; அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும், அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன், மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும் காப்பாற்றிய புராணங்களை அருளினார்.

இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும், 'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற வழி கூற வேண்டும்' என, வேண்டினர்.'நவராத்திரி தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும், கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப் பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால், நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம் எனக்கூறினார்.

இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும் வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும் மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்; இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப் பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம் முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக' என்று வரமருளினாள். தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில், ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம். அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன் விளங்கப் போகிறான். வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்' என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில் கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன் வாழலாம்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்.



நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பகை ஒழியும். இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி | சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் || 

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோ, அந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

                              

சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாக, புலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள். அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம். மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா. சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.

பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |

ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.



 ( ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )

                                                   

மூன்றாம் நாள்

த்ரிதியையன்று  -  வாராஹி

மலர்: சம்பங்கி

நைவேத்தியம் : சர்க்கரை   பொங்கல்

நிறம்: சாம்பல்

கோலம் : பூ கோலம்.

ராகம் : காம்போதி ராகம்

ஸ்லோகம் :

ஓம்  மகிஷத்வஜாய  வித்மஹே  தண்ட ஹஸ்தாய தீமஹி |

தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ||

அம்மன் அருள் பெருகும் . . . 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal