Saturday, July 19, 2008

சிறுவாச்சூர் மதுர காளியம்மன்இந்த மூன்றாம் ஆடி வெள்ளியன்று திருச்சிக்கு அருகில் சிறுவாச்சூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மதுர காளியம்மன் தரிசனம் பெறுவோம்.ஓதும் வேத உட்பொருளாவாய் தாயே மதுர காளி
உலகம் காக்க சிறுவாச்சூரில் ஒளிரும் தாயே மதுரகாளி
கசப்பில் இனிமை கலந்துற வாடும் காளித்தாயே சிறுவாச்சூரில் உந்தன்
கழல் பணிந்தாரைக் கை தூக்கும் கருணை உள்ளதாயே மதுரகாளி
.
காலம் என்பதன் தெய்வீக வடிவமே காளி. இறைவி தன் பக்தர்களை காத்து அருளுவதுடன், தீயவர்களை அழிக்கவும் செய்கின்றார். இவ்வாறு தீமைகளை, அதர்மத்தை அழிப்பதற்கான ரூபமே காளி . இதையே சமஸ்கிருதத்தில் "துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன" என்று கூறுவார்கள். இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!.
காளி தேவியின் வழிபாடு வட மாநிலங்களிலே அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது. மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இன்னல்களைத் தந்த அசுரர்களை வதைத்து ஒழிக்கும் கோபமே உருவான தேவதையாகவே காளி தேவி வணங்கப்படுகின்றாள்.

ஸ்ரீ மஹா விஷ்ணு பாற்கடலிலே மாயத் துயிலில் ஆழ்ந்திருந்த போது அவரது காதிலிருந்து தோன்றிய மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவை துன்புறுத்த, ஆதி பராசக்தி ஆனவள் அந்த அசுரர்களை அழிக்க மஹா மாயாவாக உருவெடுத்து விஷ்ணுவின் உறக்கத்தை கலைக்க இருவரையும் விஷ்ணு சம்ஹாரம் செய்தருளினார். மீண்டும் மஹ’சாசுரன், சும்பன்,நிசும்பன் என்ற அரக்கர்களையும் அழிக்க தேவர்களின் அம்சமாக அவர்களின் ஆயுதங்களையெல்லாம் பதினெட்டுத் திருக்கரங்களிலே ஏந்தி துர்கா பரமேஸ்வரியாக அவர்களை வதம் செய்தாள் அன்னை.

பின்னர் சும்ப நிசும்பர்களின் தளபதிகளான சண்ட முண்டர்களையும் தேவி எதிர்த்த போது தேவியின் நெற்றியிலிருந்து கருமையான நிறத்துடன் மிகவும் கோரமான உருவம் தாங்கி முகத்தில் மூன்று கண்களுடனும் , கட்கம், சக்கரம், கதை, வில், அம்புகள், சூலம், உலக்கை போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி மஹா காளி ஆவிர்பவித்தாள். சண்ட முண்டர்களின் தலையை வெட்டி தேவியின் காலில் சமர்பித்து சாமுண்டி ஆனாள். மேலும் சும்ப நிசும்பர்களுக்கு துணையாக நின்ற ரக்த பீஜன் பிரம்மாவிடம் ஒரு அரிய வரம் பெற்றிருந்தான். அவனுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஒரு புதிய அரக்கன் தோன்றுவான் என . போரின் போது தேவி இவனை சமாளிக்க அரக்கனின் ரத்தம் கீழே விழாதவாறு காளியை பருகுமாறு தேவி கூற , ஆயிரக்கணக்கன நாக்குகளை எடுத்து காளி அரக்கனின் ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பருகியதால் தேவியால் ரக்த பீஜனை எளிதாக கொல்ல முடிந்தது.


சிவபெருமானைப் போலவே காளியும் அக்னி அம்சம் எனவே தான் உக்ர அம்சமான தேவிகளான காளியம்மன், மாரியம்மன், பிடாரி, அங்காளம்மன் முதலியோரின் சிலைகளின் கிரீடம் " ஜ்வலா மகுடம் " என்னும் அக்னி ஜ்வாலை வடிவாக வடிக்கபடுகின்றன. அப்படிப்பட்ட கோவில்களிலேதான் அக்னி சட்டி எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன.


தமிழ் நாட்டிலே தில்லை, திருவாலங்காடு, உறையூர், மற்றும் சிறுவாச்சூரிலே காளியாக அன்னை சிறப்பாக கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றாள். சிறுவாச்சூர் என்னும் திருத்தலத்திலே மதுர காளியாக எழுந்தருளி அருள் பாலிக்கும் அந்த அன்னையின் பெருமைகளைப் பற்றி அறிந்து கொள்வோமா?


சீர் மதுர காளிதனை சிந்தையில் வைத்திடப்
பேர் விளங்கும் நற்பேறும் பெற்றிடலாம்- யார்க்கும்
கருணை புரிவாள் கழல் பற்ற நெஞ்சே
சிறுவாச்சூர் ஆலயமே சேர்.

மூர்த்தி, தலம், தீர்த்தமென முச்சிறப்பும் அமைந்த பல திருத்தலம் தான் இந்த உலகை எல்லாம் காக்கும் எம் அன்னை மதுர காளியாக எழுந்தருளி அருள் பாலிக்கும் சிறுவாச்சூர் திருத்தலம். திருச்சி சென்னை மார்க்கத்தில் பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ து‘ரத்தில் அமைந்துள்ளது இத்தலம். சுற்றிலும் மலைகளும், ஏரிகளும், சூழ வளம் கொழிக்கும் தோப்புகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றாள் அம்மை மதுர காளி.

தல வரலாறு : ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழி படும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அம்மையிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அல்லலுறும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுரை காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் இடம் கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான், தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜ“வராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் அந்த அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் மதுரை காளியாக அம்மை.

பின் செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்ளுகிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாரதரனை காட்டப்படுகின்றது. செல்லி அம்மனுக்கு குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை பிறந்தால் "பால் முடி" கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.. அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதத்திற்குள் சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்.மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக மாறியது என்று நம்பப்படுகின்றது. சினங்கொண்டு இங்கு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

இத்தலத்தின் மற்றொரு ஐதீகம், அம்பிகையே சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவர்க்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் அடைந்தபோது அமைதி கொண்ட அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானள் என்பது செவிவழிச் செய்தி.
சிறுவாச்சுருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது, தங்க கவசம் சார்த்திய பின் அன்னையின் திவ்ய உருவம் தன் எப்படி ஜொலிக்கின்றது பாருங்கள் ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள் பொழியும் திருமுக மண்டலத்துடன், வலது மேற் கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அக்ஷ்ய பாத்திரமும் தாங்கி, மார்பிலே ரத்ன பதக்கமாட,பொன் தாலியும், காதிலே தடாகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், பாதட்திலே சிலம்பும் மின்ன, தன் வாகனமாம் சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சி தராமல் அருளும் நிலையிலே தரிசனம் தருகின்றாள் அம்மை. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.
சிறியத் திருக்கோவில், முன்புறம் இராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் முன்னே நமக்கு வலப்பக்கம் ஓர் ஏரியும், இடப்பக்கம் ஒரு குளமும் உள்ளன. திருக்குளம் ஆதி சங்கரரால் உருவாக்கப்பெற்றது. துறையூர்க் கோட்டையின் குறுநில மன்னர்கள் கோயிலை எழுப்பினர். கோவிலின் உட்சென்றவுடன் இடப்புறம் ஒரு மண்டபமும் அதன் எதிரில் ஒரு கிணறும் உள்ளது.

ஆண்டு தோறும் சித்திரை திங்களில் அமாவாசைக்கு அடுத்த செவ்வாயன்று அம்மனுக்கு பூச்சொரிதல் தொடங்குகின்றது, அதற்கடுத்த செவ்வாயன்று காப்புக்கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகின்றது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கியத் திருவிழாவாகும். மேலும் ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி பதினெட்டாம் பெருக்கு, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசியில் மஹா சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் திருக்கோவில் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றது.

அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் .ஒரு முறை அம்மனை தரிசனம் செய்தவர்களை மறுபடியும் மறுபடியும் தன்னிடம் ஈர்க்கின்றாள் அன்னை. எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சன்னதி. பூசை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் 1 1/2 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

அங்க பிரதக்ஷணம் அம்மனுக்கு ஒரு சிறந்த பிரார்த்தனை. மற்றுமொறு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு. வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள்.

பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன. குழந்தைப் பேறும் கிட்டுகின்றது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக அன்னை மதுர காளி ஆட்சி செய்து வருகின்றாள். சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்க்கு எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள். தல விருட்சம் மருத மரமாகும் தீர்த்தம் ஈசான திலையில் உள்ள திருக்குளமாகும்.
தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணைத் திறத்தால் நல்லன நல்கி நலமான வாழ்வமைத்து தரும் மதுர காளியம்மனை சிறுவாச்சூர் தலம் சென்று

கொற்றவள் எங்கள் குலக்கொடி செல்வக்குமரனை முன்
பெற்றவள் வேதப் பெருமையள் ஞானப் பெருந்தவத்தள்
கற்றவர் போற்றும் கவின் சிறுவாச்சூர் கவழவருள்
உற்றவள் ஐயை மதுர காளி உமையவளே!

என்று மனமுருகி வழிபட்டு நன்மையடைவோமாக.
ஆதாரம்: திருக்கோவில் தலவரலாற்று நூல்.
* * * * * * *

Labels: , , ,

4 Comments:

Blogger கவிநயா said...

அருமையான பதிவு. வழக்கம் போல அழகான படங்கள். (உங்க அனுமதியோட சிலவற்றைச் சுட்டுக்கலாமா? :)

//ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள் பொழியும் திருமுக மண்டலத்துடன், வலது மேற் கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அக்ஷ்ய பாத்திரமும் தாங்கி, மார்பிலே ரத்ன பதக்கமாட,பொன் தாலியும், காதிலே தடாகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், பாதட்திலே சிலம்பும் மின்ன, தன் வாகனமாம் சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை.//

என்னமாய் வர்ணித்திருக்கிறீர்கள், அன்னையின் திருக்கோலத்தை. பார்க்கத் திகட்டாதது மட்டுமின்றி அவள் அழகைப் படிக்கவும் திகட்டவில்லை. மிக்க நன்றி.

9:41 PM  
Blogger Kailashi said...

//உங்க அனுமதியோட சிலவற்றைச் சுட்டுக்கலாமா?//

எதற்காக இந்தபெரிய வார்த்தைகள் எல்லாம். எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிவானந்த வெள்ளம் பெருகிக்கிடக்குது உலகெங்கும் பருக வாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் பாடியது போல அவர் காட்டுவதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள்.

Right Royal ஆக நீங்கள் படங்களை தங்கள் கவிதைகளில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

பிறக்கும் போது கொண்டு வந்தது ஏதுமில்லை, இறக்கும் போது எதுவும் கொண்டு போவதுமில்லை, இந்த இடையில் வந்த சொத்து எல்லாம் சிவன் தந்த சொத்து - எனவே தாராளமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

வந்து படித்து மகிழ்ந்து பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி, நாளை ஆடிப்பூரம் அதற்கான சிறப்பு பதிவையும் கண்டு களியுங்கள் அம்மன் அருள் பெறுங்கள், நன்றி.

9:14 PM  
Blogger கவிநயா said...

மிக்க நன்றி கைலாஷி. அடுத்த பாடல் மாங்காடு காமாக்ஷி மீதுதான், அம்மன் பாட்டு வலைபூவில் இடுவதாய் இருக்கிறேன், உங்கள் படத்துடன்...

ஆடிப்பூரப் பதிவைக் கண்டு பிடிக்க முடியவில்லை, என்னால். இணைப்பு தர முடியுமா?

6:10 AM  
Blogger Kailashi said...

//அடுத்த பாடல் மாங்காடு காமாக்ஷி மீதுதான்//

அடுத்த பாடலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

இன்று(04.08.08) தானே ஆடிப்பூரம். என்வே இன்று தான் பதிவிடுகின்றேன்.

தொடுப்பு : http://navarathrii.blogspot.com/

8:06 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal