கோலாகல நவராத்திரி - 2
அகில ப்ரஹ்மாண்ட கோடிகளையும் தன் கர்பத்தில் தாங்கும் பராசக்தியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை விசேஷமாக ஆராதிக்க வேண்டிய திருநாள் நவராத்ரி. வசந்த நவராத்திரியில் அவளை பரம ஸௌம்ய மூர்த்தியாக பாவிப்பதும், சரத் காலத்தில் அவளையே சற்றே சினமுடைய கொற்றவையாக பாவிப்பதும் வழக்கம்!!
சண்டிகா பரமேச்வரியாக அம்பாளை பாவித்து பூஜிக்க வேண்டிய புண்ய தினங்களே நவராத்ரி. மென்மையான கொடி போல் துவளும் கரங்களில் தங்கத்தினாலான பாசாங்குசங்களையும், கரும்புவில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்தியருளும் காமாக்ஷியே, துஷ்ட நிக்ரஹத்திற்க்காக பதினெட்டுக் திருக்கரங்களில் பதினெட்டு ஆயுதங்களைத் தாங்கிய ஶ்ரீசண்டிகா மஹாலக்ஷ்மியாக ஆவிர்பவிக்கிறாள்.
முக்குண ஸம்பந்தமும் துளியுமில்லாத பூரண ஞானரூபிணியே லலிதையாகிற காமாக்ஷி எனில், மூன்று குணங்களும் சரிசமமாக ஏற்றக்குறைச்சல் இல்லாமல் விரவியிருக்கும் ப்ரஹ்மசக்தியே ஶ்ரீசண்டிகை. இரண்டுமே தேவியின் ஒரே ஸ்திதியைக் குறிப்பது என்றும் கூறலாம்!!
அப்படிப்பட்ட லோகாம்பிகையை புண்யமிகு நவராத்திரி சமயத்தில், பரையை ஆராதிப்பதைக்காட்டிலும் உத்தமமானது வேறொன்றுமில்லை.
கருணை மிகுந்த வடிவுடையவளான பராசக்தியை பல்வேறு துதிகளாலும் போற்றிப்புகழ வேண்டிய நாட்கள் எல்லாமே என்றாலும் அதென்ன நவராத்ரி தினங்கள் மட்டும் விசேஷம்!!? என்றால், அம்பிகை பூரண ப்ரஹ்மசக்தியாக, அத்வைத ரூபிணியாக தன்னைத் தவிர வேறொன்றில்லாத ஆத்மஸ்வரூபிணியாக பொலியும் ஒன்பது தினங்களே நவராத்ரி நாட்கள்.
தேவி மாஹாத்ம்யத்தில் ஶ்ரீசண்டிகை சும்பனிடம் கூறுவாள் "மூடனே!! இவ்வுலகில் என்னைத் தவிர உள்ளது எது!! நானொருத்தியே எல்லாமாக விளங்குகின்றேன் என்பதை உணர்ந்துகொள்!!" என்கிறாள் அம்பிகை!!
வேதங்களில் அத்வைதம் எப்படி ஸூசிக்கப்படுகிறதோ, போலே வேத துல்யமான ஶ்ரீசண்டி ஸப்தசதியிலும் அத்வைதமே ஸூசிக்கப்படுகிறது.
உலகிற்கெல்லாம் பெரிய துன்பமிழைத்த மஹாஸுரனான மஹிஷாஸுரனை ஒழிக்க, ஸர்வ தேவர்களும் சேர்ந்து லோகமாதாவான பகவதியைத் துதித்தார்கள். ஸர்வ தேவ சரீரங்களிலிருந்து தேஜஸ் கிளம்பி மூலசக்தியான அம்பாளிடம் ஒடுங்கியது. அதைக் குறிக்கவே நாம் கொலு பொம்மைகளை வைக்கின்றோம்!!
ஸர்வ தேவ சரீரங்களிலிருந்தும் சக்திகள் வெளிக்கிளம்பி ஸர்வசக்தி ரூபிணியான ஶ்ரீஅம்பாளிடம் ஐக்யமாகிவிடுவதால், ஸர்வ தேவர்களும் சக்தி ஹீனர்களாக விளங்குவதைக் குறிக்கவே மண்ணால் செய்யப்பட்ட பதுமைகளை வைக்கிறோம்!!
கலசத்தில் பவானியை ஆவாஹனம் செய்து ஆராதிப்பது ஸர்வமங்களங்கும் பெருக காரணமாகும்!! ஶ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரியாக ஶ்ரீலலிதேச்வரியாக அம்பாள் பண்டாஸுரனை ஒழிக்க ஆவிர்பவிக்கும் போது ஸகல தேவர்களும் மஹாசம்புநாதர் இயற்றிய மஹாயாகத்தில் ஆஹுதி ஆனார்கள். மஹாசம்புவான பரமேச்வரன் மட்டுமே ஶ்ரீசக்ரராஜ ரதத்தில் தோன்றிய ஶ்ரீலலிதையை ஆனந்த பாஷ்பம் பெருக கண்டு களித்தார்.
ஶ்ரீதுர்காம்பிகையாக மஹிஷனை ஒழிக்க ஶ்ரீராஜராஜேச்வரி தோன்றிய போது மீள ஸர்வ தேவர்களும், எந்த அம்பாளிடமிருந்து தங்கள் சக்தியைப் பெற்றனரோ, அதே அம்பாளிடமே தங்கள் சக்தி மறுபடி ஒடுங்கக் கண்டனர்.
இரண்டு சரித்ரங்களிலுமே ஏகசைதன்ய மூர்த்தியாக அம்பிகை தானொருத்தியே விளங்கி அசுர நிக்ரஹத்தைச் செய்தனள்.
அம்பிகை சக்தி வடிவினளாக விளங்குவாளாயினும், பூரண ப்ரஹ்ம வடிவினள். பூரண ப்ரஹ்ம நிலையிலே அவள் ஞான வடிவினள். அதனாலே அம்பாளை சைதன்ய ரூபிணி, ஸம்வித் ரூபிணி, பராஸம்வித், கேவலானந்தை என்றெல்லாம் சிவத்தை தனக்குள் ஐக்யமாய்க் கொண்டு விளங்கும் வடிவினைக் கூறுவர்.
* * * * * * * * *
நவ கன்னிகையாக வழிபடும் போது நவராத்திரியின் முதல் நாள் பிரதமை திதியான இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம். குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||
(ஒரு குழந்தையைப் போல லீலா வினோதங்களைச் செய்பவளை, பிரம்மன் முதலான தேவர்களை, எந்த சக்தி தனது லீலைகளினால் சிருஷ்டிக்கிறதோ, அந்த குமரியாகிய சக்தியை வணங்குகிறேன்.)
நவ துர்க்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, வரை ராசன் கன்னியாக பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம்.
வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.
( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )
ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வாராகஹி.
இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.
சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். இவ்வாறு நவசக்திகளாக அம்பாளை வழிபடும் போது பிரதமையன்று மகேசுவரியாக வழிபடுகின்றோம். இந்த அம்பாள் சிவனின் அம்சம். ரிஷப வாகனம், திரிசூலம் தாங்கி முக்கண்ணியாக அருள் பாலிக்கின்றாள்.
திருமயிலை கற்பகாம்பாள் மஹேஸ்வரி அலங்காரம்
பிரதமையன்று - மஹேஸ்வரி
மலர்: மல்லிகை
நைவேத்தியம் : வெண் பொங்கல்
நிறம்: மஞ்சள்
கோலம் : அரிசி மாவு
ஸ்லோகம் :
ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி |
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத் ||
Labels: குமாரி, நவராத்திரி, பிரதமை திதி, மஹேஸ்வரி, ஷைல புத்ரி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home