மாங்காட்டில் தவக்கோலம்
இன்று ஆடி மாத இரண்டாம் வெள்ளி எனவே மாங்காட்டில் தவம் புரியும் காமாக்ஷியம்மனின் தரிசனம் பெறுவோம்.
இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் தவம் புரிந்து , பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயொரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை இது. மாங்காடு ஸ்ரீ காமாக்ஷியம்மனின் மகிமை இத்தன்மையது. இனி மாங்காடு என்னும் மகத்தான புண்ணியத் தலத்தின் எழில் கொஞ்சும் காமாக்ஷியைக் காண வாருங்கள்.
மாங்காட்டில் ஸ்ரீ காமாக்ஷி
அன்னையின் தவக்கோலம்
ஆதி காமாஷி, தபசு காமாக்ஷி, அர்த்த மேரு ஸ்ரீசக்ரம்
ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.
மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரியும் மலையரசன் மகளுமான தன் தேவியின் மேல் கருணை கொண்ட செஞ்சடையோன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி தருகிறார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறுகின்றார்.
தெற்கு இராஜகோபுரம், மாங்காடு
ஆம்ரவனத்தில் தவம் இருந்த அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு செல்கிறார். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வரலானாள். பின்னர் கம்பாநதியை பெருகிவரச் செய்து தழுவக்குழைந்த நாதராகி பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். இவ்வாறு மாங்காட்டிலே தவக்கோலம் காட்டிய பண்டாசுரனை அழித்த அம்பிகை அதனால் காஞ்சியிலே மணக் கோலம் காட்டி “கல்யாண காமாட்சி " யாக அருள் பாலிக்கின்றாள்.
ஸ்ரீ அர்த்த மேரு ஸ்ரீ சக்ரம்
பவளம் போல் மேனியனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால் , தான் தவத்திற்க்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்க மாட்டாமல் தவித்தார்கள் நிலங்கள் வற்றிப் போயின. கால்நடைகள், மக்கள் மற்றும் அனைத்து ஜ“வராசிகளும் செய்வதறியாமல் திகைத்தன.
அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கர பகவத் பாதாள் வந்தார். தேசாந்திரமாக வந்து கொண்டிருந்த அவர் மாங்காடு பிரதேசத்தை அடைந்த போது மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன " அஷ்ட கந்தம்" அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.
மாங்காடு பிரகாரத்தின் கூரையில் உள்ள ஸ்ரீசக்ரம் (சுதை சிற்பம்)
இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை(கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது. எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்ரத்தை ஆதி சங்கர பகவத் பாதாள் உருவாகியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது. இத்திருக்கோவிலில் ஸ்ரீ சகரத்திற்கே முக்கிய பிரதானம். குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாக்ஷி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றான. தபஸ் காமாக்ஷி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான " ஆதி காமாக்ஷி" அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு. அவ்வாறே இங்கும் காமாக்ஷி அம்மனுக்கு பிரதானமான தனி ச்ன்னதி உள்ளது. மாவடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.
ஆறு வார வழிபாடு
இத்தெய்வீகத் திருத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் எலுமிச்சம் கனியுடன் அம்மனைத் தரிசித்து, பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள்(அதாவது ஒரு மண்டலம்) அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடுகிறது. அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து, பின்னர் அதன் பயனால் காஞ்சியில் மணக்கோலம் கொண்டமையால், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர், ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்யம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்கு தொட்டில் கட்ட அன்னை அருள் புரிவாள். பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கானோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். இங்கு புதிதாகச் செய்யப்பட்டுள்ள தங்க ரதம் தமிழகத்திலேயே உயரமானதாக விளங்குகிறது.
அம்மன் சரஸ்வதியுடனும், லக்ஷ்மியுடனும் தங்கத் தேரில் வலம் வரும் அழகே அழகு.
முதல் வாரத்தின் போது வெற்றிலை, பாக்குடன் தேங்காயும், பூ பழத்துடன் கற்பூரத்தையும் இத்துடன் இரண்டு எலுமிச்சை கனிகளையும் சேர்த்து அம்மன் சன்னதியில் அர்ச்சனை செய்தல் வேண்டும். அர்ச்சனை செய்த பின்னர் தேங்காய் பிரசாதத்துடன் ஓர் எலுமிச்சை மட்டும் தருவார்கள். மற்றது அம்மனுடன் இருக்கும், நம் கையில் கொடுத்த பழத்தை தினமும் பூஜித்து வருதல் வேண்டும். இரண்டாம் வாரம் சென்ற வாரம் கொடுத்த எலுமிச்சையும் புதியதாக இரண்டையும் சேர்த்து மூன்றாக சன்னதியில் கொடுக்க வேண்டும். இதே போல ஐந்து வாரங்கள்முடிந்ததும், ஆறாவது வாரத்தில் முதல் வாரத்தைப் போல் தேங்காய் சகிதத்துடன் ஒரு புஷ்ப மாலையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு நன்கு காய்ச்சிய பாலுடன் கற்கண்டு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், தேன் முதலியவற்றைச் சேர்த்து அம்மனுக்கு நிவேதனம் செய்து அப்பாலை அங்குள்ள அனைவருக்கும் வினியோகம் செய்தல் வேண்டும். மாங்காட்டிலே தனியான ஒரு மாமரத்தடியிலே அம்மன் தவம் செய்யும் போது அவருக்கு ஆகாரம் பால் மட்டுமே அதனால் தான் இன்றும் ஆறு வார வழிபாட்டின் நிறைவின் போது அனைவருக்கும் பால் வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதுவே ஆறு வார வழிபாட்டு முறை.
ஆதி காமாக்ஷி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மற்ற நாட்களில் காலையில் ஒரு தடவை அபிஷேகம் நடைபெறுகின்றது. அந்த அபிஷேகத்திற்கு, உபயம் செய்பவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே அம்மனின் மகிமை விளங்கும். வெள்ளி மற்றும் பௌர்ணமி தினங்களில் மாலை ஊஞ்சல் சேவை நடைபெருகின்றது. மேலும் சித்திரையில் தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வைகாசியில் வைகாசி விசாகம், ஆனியில் ஆனித் திருமஞ்சனம், ஆடியில் ஆடிப் பூரம், ஆவணியில் ஆவணித் திருவோணம், புரட்டாசியில், நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மை வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருகின்றாள், பௌர்ணமியன்று நிறைமணிக் காட்சி தருகின்றாள் அன்னை. ஐப்பசி மாதம் அன்னபிஷேகமும், கார்த்திகையில் கார்த்திகை தீபமும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும், தையில் தைப் பூசமும், மாசியில் மஹா சிவ ராத்திரியும், மாசி மகமும், பங்குனியில் தெலுங்கு வருடப் பிறப்பும், பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டடப்படுகின்றன.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர்
ஸ்ரீ காமாக்ஷ’ அம்மன் திருக்கோவிலைப் போலவே தொன்மையானது. ஸ்ரீ பார்க்கவரேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர், பார்க்கவ முனிவர் எனப்படும் சுக்ராச்சாரியாரால் வழிபாடு செய்யப்பட்டவர். இவ்வாலயத்தில் ஒரே கல்லில் வடிக்கப் பட்டுள்ள வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ முருகப் பெருமானையும், மாங்கனியை கையிலேந்திய ஸ்ரீ வினாயகரையும் தரிசிக்கலாம். ஆலயத்தின் விமானம் அழகிய வேலைப்படுகளால் ஆனது, ஒரு குன்றைப் போன்றும், தேரைப் போன்றும் காட்சி தருகின்றது. சோழர் காலத்தியது. சுக்ர பகவான் வணங்கியதால் சுக்ர வழிபாடு சிறப்பானது.
ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்
ஸ்ரீ வைகுண்டப் பெருமாளின் ஆலயமும் ஸ்ரீ காமாக்ஷ’ அம்மனின் ஆலயத்திற்க்கு அருகில் பொலிவுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ தேவி பூதேவியுடன் அமர்ந்த நிலையில் , அந்த அலையாழி அரி துயிலும் மாயன் தன் தங்கையின் திருமணத்திற்கு சீதனமாக கையில் கணையாழியுடனும், வீற்றிருக்கும் நிலையில் சேவை சாதிக்கின்றார். பெருமாளின் அருகிலே மார்க்கண்டேய முனிவர் தவக்கோலத்தில் காட்சி தருகின்றார். தாயாருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.
இதுவல்லாமல் புனிதத்தலமான இம்மாங்காட்டுத் தலத்தில் ஸ்ரீ கைலாச நாதர், ஸ்ரீ பாலாண்டேஸ்வரர், ஸ்ரீ வேம்புலியம்மன், ஸ்ரீ மாந்தியம்மன் சன்னதிகளும் அழகுற அமைந்துள்ளன. இதுகாறும் என்னோடு எழில் காஞ்சும் காமாக்ஷ’யின் புண்ணியத்தலமான மாங்காட்டைப் சுற்றி வந்த நீங்கள் நாவாற அவள் நாமம் சொல்லி மாங்காடு சென்று அவள் திருப்பாதம் பணிந்து அளவற்ற அருளினைப் பெற்று, ஆனந்த வாழ்வினை பெறுவீர்களாக என்று பிரார்த்திக்கிறேன்.
ஒம் சக்தி