Monday, February 04, 2008

அமாவாசையில் ஒரு பௌர்ணமி

திருக்கடையூர் அபிராமி
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு இணையானது "அபிராமி அந்தாதி" . சாக்தர்களுக்கு அன்னையின் ஒரு அருமையான கொடை அது. அபிராமி அந்தாதி பாடல் என்று அறியாமல் கூட நூறு பாடல்களுள் ஒரு பாடலையாவது பாடாத தமிழர் இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். அந்த அமுதத்தை, உய்ய வைக்கும் தத்துவத்தை, அன்னையின் புகழை இயம்பும் நூலை நமக்கு எல்லாம் வழங்கி அருள அம்மை நடத்திய அற்புதம் ( ஆம் நடக்காததை நடத்தி) நாம் எல்லாரும் உய்ய வழங்கினாள் சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயை, மலையரசன் தன் பொற்பாவை, அன்னை அபிராமவல்லி. இந்த அதிசயம் நடைபெற்றது ஒரு தை அமாவாசையன்று ஆகவே இன்றைய தினம் தை அமாவாசையென்பதால் அந்த அற்புதத்தை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




உலக மக்கள் உய்யும் பொருட்டு அம்மையும் அப்பனும் தங்களது திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டிய தலம் தான் திருக்கடையூர். தன் பக்தன் மார்க்கண்டனுக்காக யமனையே இடது காலால் உதைத்து சம்ஹாரம் செய்து மார்க்கண்டனுக்கு என்றும் பதினாறு என்ற சிரஞ்சீவி தன்மையை எம் ஐயன் அருளிய தலம் . " பிஞ்சில வனம்" என்றும் "வில்வ வனம்" என்றும் வழங்கப்படும் இத்தலம், எம்பெருமான் செய்த வீர செயல்களை குறிக்கும் "அஷ்ட வீரட்டானத்தில்" ஒன்று. இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத்தலமும் ஆகும் .பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முத்லியோர் வழிபட்ட தலம்.

காவிரியின் தென் கரையிலுள்ள பாடல் பெற்ற தலங்களுள் இது 47வது தலம். 11.17 ஏக்கர் பரப்பளவில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜ கோபுரம், கிழக்கு நோக்கிய 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருத்தலம். தீர்த்தம் அமிர்த புஷ்கரணி, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம். தல விருட்சம் வில்வம். கோபுரத்தில் நுழைந்தவுடம் வலது பக்கம் 100 கால் மண்டபம் உள்ளது எதிரே அமிர்த கடேஸ்வரரின் சன்னதி, இடப்புறம் மேற்கு நோக்கி அபிராமி அம்மையின் சன்னதி ஒரு பிரகாரத்துடன் தனி கொடி மரத்துடன் அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் திருவிழா மண்டபம் உள்ளது. கார்த்திகை மாத சோமவார 1008 சங்காபிஷேகத்தின் போதும், மற்றும் சித்திரை மாதத்தின் பிரம்மோற்சவத்தின் போதும் பஞ்ச மூர்த்திகள் தரிசனம் தருகின்றனர். உள்பிரகாரத்தில் மஹா லஷ்மி, முருகர், நடராஜர், துர்க்கை, தஷ’ணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன.
திருக்கடையூர் இராஜ கோபுரம்



ஒரு "தை அமாவாசையன்று" சுப்பிரமணியர் என்னும் தன் அன்பருக்காக அன்னை அபிராமி 16 கலைகளுடனான பூரண சந்திரனை வானில் வரச் செய்து பௌர்ணமியாக்கினார் இந்த அருட் செயலைப் பார்ப்போம் இப்பதிவில்.



அபிராமி பட்டர் என்று பின்னாளில் அறியப்பட்ட சுப்பிரமணியன் என்ற அந்தணர் அபிராமி அம்மையின் மேல் மிகவும் பக்தி கொண்டு இருந்தார். அவர் சமய தத்துவ சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் இவர் பட்டர் என்று அழைக்கப்பட்டார். அவர் தமிழ் மற்றும் வடமொழி இரண்டிலும் வல்லவராகவும் விளங்கினார். அவருக்கு பார்க்கும் இடமெல்லாம் எம் அம்மையின் வடிவாகவே தோன்றியது.
அங்கிங்கெனாதபடி எங்மும் நிறைந்திருக்கும் அம்மையின் திருவடிவம் அவர் கண்ணிலும் நெஞ்சிலும் எப்போதும் எப்படி நிறைந்திருந்தது அவரே பாடுகின்றார் இவ்வாறு
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.
பொருள்: என்னுடைய துன்பங்களை எல்லாம் தீர்த்து அருளுகின்ற என் அன்னை திரிபுர சுந்தரியின் திருக்கரங்களில் ஏந்தியிருக்கின்ற பாசம், அங்குசம், பஞ்ச பாணங்கள், கரும்புவில், ஒளி பொருந்திய திருமேனி, சிற்றிடை, தனங்கள் ஆகியவை எப்போதும் அடியேன் பார்க்கும் திசைகளிலெல்லாம் தெரிகின்றன.
இவ்வாறு அம்மையின் அருள் திறத்தில் திளைத்திருந்த அவரை மற்ற அந்தணர்களுக்கு பிடிக்க வில்லை. ஒரு நாள் தஞ்சை மன்னர் சரபோஜி அவர்கள் கோவிலுக்கு வந்திருந்த போது மற்றவர்கள் அவரைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறிட பட்டர் மேல் கோபம் கொண்ட மன்னன், அம்மை அபிராமியை விழுத் துணையாக கொண்டிருந்த அவரை இன்றைய திதி என்ன என்று தங்கள் கையில் உள்ள பஞ்சாங்கத்தை பார்த்து கூறச்சொல்ல, அம்மையின் ஒளி வடிவே நினைவாகவே இருந்த அவர் இன்று பௌர்ணமி திதி என்று கூறினார். உடனே அரசன் அது "மதி கெட்ட தினம்" ( சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால் உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.

அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அபிராமி அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மென்கொடி குங்குமத் தோயமன்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே (1)

என்று பாடத்தொடங்கி ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சங்கிலியாக தறித்துக் கொண்டு வந்தார்.

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதஞ் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே (79)
என்று பாடும் போது





அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, லோக மாதா, ராஜ ராஜேஸ்வரி, ஜகத் ஜனனி, லலிதாம்பா, தயாபரி , கருணைக் கடலாம் எம் அம்மை பட்டர் முன் கரங்களில் அங்குசம், பாசம், மலர் அம்பு , கரும்பு வில்லுடன் தோன்றி திருதரிசனந் தந்தருளி பட்டருக்காக தனது தடாகங்களில் ஒன்றை கழற்றி வானிலே வீச மன்னரும் மற்றையோரும் அஞ்சும்படி தை மாத முழு அமாவாசை நாளில் பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன் தோன்றினான். இங்ஙனம் அமாவாசை நாளில் பூரண சந்திரன் தோன்றும்படி அம்மை அபிராமியின் அருளால் அதிசயம் நடத்திக் காட்டினார் அபிராமி பட்டர்.

அரசன் அவ்வதிசயத்தைக் கண்டு அவரிடத்தில் தனது தவறுக்கு மன்னித்தருளுமாறு வேண்டி அவரிடம் மிக்க அன்பும் அச்சமும் மதிப்பும் உடையவராய் அவருக்கு மான்யமும், தாமிர சாசனமும் கொடுத்து போற்றினார்.
அபிராமி பட்டர் இயற்றிய 100 பாடல்களும் அருந்தமிழ் செம்பாடல்கள் அந்த பாடல்களை அகங்கனியப் பாடி வழிபட்டால் உடல் குழையும், என்பெல்லாம் னெக்குருகும் விழி நீர் ஊற்றென வெதும்பி யூற்றும் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகும்
அந்த அபிராமி அந்தாதியை பட்டர்

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை, அங்குசம் பாசம் குசுமன் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே !

என்று நாம் அனைவரும் உய்ய நூல் பயனாக கடைப் பாடலாகப் பாடி முடிக்கின்றார்.
அதானால்தான் திருக்கடையூர் தலத்தில் அம்மையின் தடாகங்கள் சிறப்பு, பதினாறு கலைகளுடன் பூரண நிலவானது அன்னையின் தடாகங்கள், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், தை அமாவாசை மற்றும் சிறப்பு பூஜை நாட்களில் தங்க கவசத்துடன் அம்மைக்கு மூன்று அடுக்குகள் கொண்ட தடாகங்கள் அணிவிக்கப்படுகின்றன. சமயம் கிடைக்கும் போது சென்று தரிசியுங்கள்.



இவர் மேலும் அபிராமி அம்மையின் மேல் பதிகமும் பாடியுள்ளார் அந்த பதிகத்திலிருந்து ஒரு அருமையான இரு பாடல்கள்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வா ராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாதவாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய தொண்டரொடு கூட்டுகண்டாய்

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே ! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி அபிராமியே.!
* * *

சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனையை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்வி தன தான்யம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த
குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி சூலி! மங்கள விசாலி!

மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக்கடவூரில்
வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

அந்தாதி என்பது 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று இறுதி எழுத்து, சொல், அசை, சீர் ,அடி ஏதேனும் ஒன்று அதற்கடுத்த முதல் பாடலின் முடிவாக வருவது அந்தாதி.



தை அமாவாசையன்று அபிராமி பட்டருக்கு அம்மை அருளிய விழா திருக்கடவூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று அம்பிகை மலர் அலங்காரத்தில் அருட்காடசி தருகின்றாள். அப்போது கொடி மரம் அருகே அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாரதனை லாட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது முழு நிலவு தோன்றியதை உணர்த்தும் வகையில் வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கின்றார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர்.



* * * * * * *
அன்பர் குமரன் அவர்கள் அபிராமி அந்தாதியை விளக்கங்களுடன் பதிவிட்டு வருகின்றார். அதை வாசித்து அன்னையின் அருட்திறத்தை அனுபவிக்க சொடுக்குக இங்கே


Labels: , , , , , ,

  • Other Articles
  • Unicode enable