Friday, October 16, 2020

கோலாகல நவராத்திரி - 1

அங்காள பரமேஸ்வரியம்மன் 


இவ்வருடம் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வந்ததாலும், சந்திரமான நாள் காட்டியின் படி அதிக மாதம் வந்ததாலும், அச்சமயத்தில் எந்த பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை என்பதாலும்  ஐப்பசியில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.  

மேலும் கொரோனா என்னும் தீநுண்கிருமியின் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதாலும் முந்தைய வருடம் போல அனைவரையும் அழைத்து கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை. ஆலயங்களுக்கும் செல்ல முடியாத நிலை, ஆயினும் நவராத்தியின் போது அம்மனிடம் இந்த தொற்றிலிருந்து உலகத்தோரை காப்பாற்று தாயே! என்று வேண்டிக்கொள்ள  அவரவர்கள் வீட்டில் இருந்தே அம்மனை வழிபடுவோம்.

                

தங்க முலாம் கவசத்தில் உற்சவர் அம்மன்  

எனவே முந்தைய நவராத்திரிகளில் எடுக்கப்பட்ட அம்மனின் படங்கள் இவ்வருடம் இடம் பெறுகின்றன.  இப்பதிவில் அடியேனது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரியின் தரிசனம் கண்டு களியுங்கள் அன்பர்களே. பாரத தேசம் முழுவதும் நவராத்திரி பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது அதில் ஒரு விதம் பற்றி இப்பதிவில் காணலாம்.

நாம் செய்யும் எல்லா காரியங்களுமே, ஒரு காரண காரியத்துடன் தான் நிகழ்கின்றன. இதை, நான்கு சொற்களால் அடையாளப்படுத்துகிறது சனாதன தர்மம். அவை, காரியம், கரணம், கர்த்தா, காரணம் என்பன. 'கரணம் காரியம் கர்த்தா காரணம்சேதி கீர்த்திதம்' என்கிறது சிவரஹஸ்யம். காரியம் என்பது, நம் வாழ்க்கையில் அன்றாடம் செய்யும் வேலைகள். அதாவது, நம் தேவைக்காக நாம் உழைப்பது, முயற்சிப்பது போன்றவை. கரணம் என்பது, கருவி. எழுதுவது காரியம் என்றால், எழுதுகோல் கருவி. அது போன்று, நமக்காக நாம் செய்யும் வேலைகள் எல்லாவற்றிற்கும் உதவும் பொருட்கள், கரணம் எனப்படுகின்றன. உபகரணம் என்ற சொல் கூட, வழக்கில் உள்ளது. எதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்குவது, காரணம் என்ற சொல்லாகும்.

                               

கர்த்தா என்பது, செய்பவரைக் குறிக்கும். நாம் செய்கிறோம் என்றாலும், நம்மை ஒருவன் இயக்குகிறான் என்றாலும், இயக்குதல் என்பது, கர்த்தா என்ற சொல்லிலேயே அடங்கும். இந்த வகையில், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் தத்துவார்த்தங்களை, எளிமையாகப் புரிந்து கொண்டால், 'நான் என்பது ஒன்றுமே இல்லை; எல்லாம் இறைவன் செயல்' என்ற உண்மை விளங்கி, மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வைப் பெற்றிடலாம். இதற்காகத் தான், ஹிந்து மதம் கூறும் வழிபாட்டு முறைகளில் கூட, இம்முறைகள் எளிமையாகப் புகுந்து, நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. ஏராளமான தெய்வ வழிபாடுகளையும், சடங்குகளையும் கூறும் ஹிந்து தர்ம சாத்திரங்களின் நோக்கம், கொண்டாட்டம் என்ற பெயரில் புத்துணர்ச்சி பெற்று, உண்மை உணர்ந்து, மனம் தளராத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதே.


                              

அம்பாளுக்கு  ஸ்ரீராஜராஜேஸ்வரி என்று ஒரு திருநாமம் உண்டு.  அதற்கு அரசர்களுக்கெல்லாம் அரசி என்று பொருள். தம் குடிமக்களுக்கு இன்னல் ஏற்பட்டால், அரசர் எப்படி தம் அமைச்சர்கள் மற்றும் சேனாதிபதிகளை கொண்டு காப்பாற்றுகிறாரோ, அதுபோல, உலக உயிர்களுக்கு எல்லாம் தாயாகிய பராசக்தியானவள், தேவர்கள், மனிதர்கள் என, யாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும், அதை ஏற்படுத்திய தீய சக்திகளை அழித்து, எல்லாரையும் காத்தருளுபவள்.

இதற்காக, தம் சக்தியால், துர்கை, லட்சுமி, சரஸ்வதி மற்றும் பிராம்மி முதலான சப்தமாதர்களை தோற்றுவித்து, அவர்களை அரக்கர்களுடன் போரிடச் செய்து, உலகை காக்கிறாள். அன்னையின் அமைச்சராக இருப்பவள், ஸ்ரீராஜ மாதங்கி; சேனாதிபதியாக இருப்பவள், ஸ்ரீவாராகி. இவர்கள் இருபுறமும் இருக்க, மற்ற சக்திகள் புடைச்சூழ, ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே, ஸ்ரீராஜராஜேஸ்வரி. இந்த மாதிரி அன்னை எழுந்தருளியிருக்கும் சபையை, நம் வீட்டிலும் அமைப்பதற்குத் தான் கொலு என்று பெயர். நவராத்திரியில் கொலு வைத்து வழிபடும் இல்லங்களுக்கெல்லாம் அன்னை எழுந்தருளி, அருள்பாலிக்கிறாள். நம் வீட்டிற்கு அம்பாளை அழைக்க நாம் விரும்புவது போன்று, நம் வீடுகளுக்கு வருவதற்கு அம்பிகையும் விரும்புகிறாள் என்பது தான் உண்மை.

இந்த அடிப்படையில், பெண்களுக்கு நவராத்திரி என்றதும் சந்தோஷமும், பரபரப்பும் ஏற்படுவது இயற்கை தானே! முன்பெல்லாம் வீட்டின் நடுவில் முற்றம் எனும் திறந்தவெளியும், சுற்றிலும் தாழ்வாரம் எனும் இடமும் இருக்கும். அப்போது, கொலு வைக்க இடத்துக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், தற்போது பலரது வாழ்க்கையும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே நகர்கிறது. அதற்குத் தகுந்தாற்போல், எப்படி வைப்பது என, பல சகோதரிகள் கவலைப்படுகின்றனர். கொலுப் படிகளும், 'ரெடிமேடாக' இரும்பு மற்றும் பிளாஸ்டிக்குகளிலேயே விற்பனைக்கு வந்து விட்டன.

படிகள், ஒற்றைப் படையில் இருக்க வேண்டும். ஐந்து படிகளுக்கு குறையாமல் இருந்தால் தான் அழகு. ஏழு, ஒன்பது என வசதிக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல அமைத்துக் கொள்ளலாம்.

                            


முதல் படியில்...

எண்ணிய காரியங்கள் தடைகள் இன்றி நடக்க விநாயகர், மன உறுதிக்கு முருகன் போன்ற தெய்வங்கள்.

2ம் படியில்...

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன், கல்வி தேவதையாகிய சரஸ்வதி மற்றும் இவர்கள் தொடர்புடைய தெய்வங்களையும், புத்தகம், பேனா முதலியனவற்றையும்.

3ம் படியில்...

காக்கும் தொழில் புரியும் ஸ்ரீமகாவிஷ்ணு - மகாலட்சுமி மற்றும் தசாவதாரங்கள், இவை சம்பந்தமுடைய பொம்மைகள்.

4ம் படியில்...

சிவ அம்சமான நடராஜர், சிவகாமி, துர்கை, காளி மற்றும் இவை தொடர்புடைய பொம்மைகள்.

5ம் படியில்...

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மையமாகவும், கயிலைக்காட்சி அரங்கன் மற்றும் இது தொடர்புடைய பொம்மைகளையும் வைக்க வேண்டும்.

இந்நிலையில், கொலு அமைப்பது பராசக்தியின் ராஜசபையை குறிப்பதாகவும், நாம் வாழும் உலகம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், நிறைவாக பேரின்பம் அளித்தல் எனும் பிரபஞ்ச ஐந்தொழில்களை உணரும் வகையிலும், நம் இல்லங்களை அலங்கரித்தால், அன்னையின் அருள்  கிடைக்கும்.

  அம்மன் அருள் வளரும் . . . . .

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal