திருஆடிப்பூரம்
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, சில ஆலயங்களில் சக்கரைக் காப்பு, கற்கண்டு காப்பு கூட கண்டிருப்பீர்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
விரை மலர் குழல்வல்லி
கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும்
அன்னை திருமயிலை கற்பகாம்பாள்
கற்பகவல்லியின் முன்னழகும் பின்னழகும்
( ஜடாதாரரின் வாம பாக மயிலுக்கு எத்தனை ஜடை அலங்காரம் பாருங்கள்)
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மையிலங்கு கண்ணிக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதாவிற்கு, அவளுக்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.
கரு காக்கும் நாயகி கர்ப்பரட்சாம்பிகை
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே என்று அபிராமி பட்டர் பாடிய படி அன்னை ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைக்கும் தாயாக கொண்டாடும் நாள். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்ட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
சொர்ணாம்பிகை அம்மனின் எழிற்கோலம்
சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.
பசுவேறி அருள் கொடுக்கும் எங்கள் பரமேட்டி
பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. தாங்கள் இப்பதிவில் காணும் திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். சைதை காரணீஸ்வரர் ஆலயத்தில் சொர்ணாம்பிகை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் அழகையும் கண்டு களியுங்களேன். மேல் மருவத்தூரில் ஆதி பரா சக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.
உயர் அரங்கருக்கு கண்ணி உகந்தளித்த
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
( படத்திற்கு நன்றி குமரன்)
வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடபப்டுகின்றது. ஏனென்றால் இன்று தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள், பூமி பிராட்டியார் மண்ணுலகில் உள்ள நாம் எல்லாரும் உய்ய பெரியாழ்வாரின் திருமகளாராய் திருஅவதாரம் செய்து எம்பெருமானுக்கு பாமாலையும், பூமாலையும் சாற்றி , நாம் எல்லாரும் உய்ய வேத சாரத்தை எளிய தமிழில் திருப்பாவையாகப் பாடினார். எனவே வைணவ தலங்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இன்று ( 04-08-08) ஆடிப்பூரத்தன்று அம்பிகையை வழிபட்டு சகல வளங்களும், நலங்களும் பெற பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சக்தி.
2 Comments:
சொர்ணாம்பிகையின் அழகே அழகு. கற்பகவல்லியின் முன்னழகும் பின்னழகும் காணக் கிடைக்காத காட்சி! ஆடிப்பூரத்தைப் பற்றி மிகச் சிறப்பான பதிவு. நன்றி கைலாஷி.
நன்றி கவிநயா அவர்களே.
பதிலளிக்க தாமதமாகிவிட்டது. வெளியூர் சென்றிந்ததால் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home