Wednesday, October 10, 2007

Navarathri # 3 ( Sri Chakram)


ஸ்ரீ சக்ரம்

பிந்து-த்ரிகோண-வஸுகோண-தசாரயுக்ம-
மன்வச்ர-நாகதல-ஸம்யுத-ஷோடசாரம்
வ்ருத்தத்ரயம் ச தரணீஸதனத்ரயம் ச
ஸ்ரீசக்ரமேத- துதிதம் பரதேவதாயா


பிந்து, முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினாலு கோணம், எட்டுத்தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று கோட்டுப் பூபுரம் என்றவைகளாகிய இது பரதேவதையின் ஸ்ரீ சக்கரம் ஆகும்.

காலடியிலே பிறந்து நமது இந்து சமயத்திற்கு புத்துயிர் ஊட்டிய மகான் ஆதி சங்கரர், இம்மதத்தை அவரவர்கள் வழிபடும் முழுமுதற் கடவுளை பொறுத்து ஆறு உட் பிரிவுகளாக அமைத்தார், அவையே " அறு சமயங்கள் " என்று வழங்கப்படுகின்றன. அவையாவன சைவம், வைணவம்,சாக்தம், காணபத்யம்,கௌமாரம்,சௌரம் ஆகும்.


இவற்றுள் சாக்தம் தேவி வழிபாடு ஆகும். ஆதி பராசக்தியே தன் சக்தியினால், அண்ட சராசரங்கள் மற்றும் சகல ஜ"வராசிகளையும் படைத்தவள். பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தாயினாலேயே தோற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்களுடைய தொழிலை செய்வதற்க்கு சக்தி தருபவள் ஆதி பராசக்தி அன்னையே என்பது சாக்தர்களின் நம்பிக்கை. ஆதி சங்கரரும் இதை தமது சௌந்தர்ய லஹரியில் இவ்வாறு கூறுகின்றார்,


" ஓ பகவதீ! பிரும்மா மிக ஸ்வல்பமான உமது பாதாரவிந்த தூளியை வைத்துக் கொண்டு தனித்தனியாக 14 லோகங்களையும் படைக்கிறார். விஷ்ணுவும் அப்படியே ஆயிரம் தலைகளால் அதை வஹ’க்கிறார். ஹரனும் உலகைக் கொளுத்தி, சாம்பலால் விபூதியாக அணிகிறார்."


இதையே அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியிலே

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


என்று இந்த பதினான்கு லோகங்களையும் படைத்தவளும்,பின் அவற்றை காப்பவளும் அபிராமி அம்மையே என்றும், சக்தி வழிபாடு, சதாசிவ வழிபாட்டிற்கு முந்தையது, என்றும் கூறுகின்றார்.

பராசக்தியே பஞ்ச் க்ருத்ய பராயணை , இதை குறிக்கவே ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரியாக அவள் இருக்கையில் பஞ்சப் பிரேத மஞ்சத்தில் வீற்றிருக்கின்றாள். இந்நிலையில் ஐந்தொழில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவராக அவள் நியமித்துள்ள கடவுளரில் நால்வர் அவளது மஞ்சத்தின் நான்கு கால்களாகவும், ஐந்தாமவர் அவற்றின் மீது அவள் அமரும் பீடப் பலகையாகவும் இருக்கின்றனர். படைக்கும் பிரம்மன், காக்கும் மாலவன், அழிக்கும் ருத்ரன், (மாயையால்) மறைக்கும் மஹேச்வரன், (மாயை நீக்கி ஸத்ய மோக்ஷ நிலையை அருளும் ஸதாசிவன் என்ற ஐவரும் சக்தி மூலமான அவளால் இயக்கப்படாவிட்டால் செயல் மரத்துப் போன மரக் கால்களும், பீடப் பலகைகளாகவும் மரித்த நிலையிலேயே உள்ளனர். அதனால்தான் பன்ஹ்ச பிரேத மஞ்சம் என்பது லலிதை ஒருத்தியே அவர்களுக்கு உயிர் பெய்து அவர்கள் மூலம் பஞ்ச க்ருத்யங்களை புரிகின்றாள். இத்தனை தொழிலையும் தானொருத்தியே புரிவது தனக்கு லவலேசமும் ஆயாஸமில்லாதே லலிதமான லீலையே என காட்டத்தான் "லலிதா" என்றா பெயர் கொண்டிருக்கிறாள் என்பது சாக்தர்களின் கொள்கை. சாக்தர்கள் அன்னையை ஜகத் ஜனனி, ஜகதம்பாள், புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, ஸ்ரீ லலிதா என்று பல வடிவங்களில் வழிபடுகின்றனர். தாயை வழிபடுவது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இருந்துள்ளது. தேவியை வணங்குபவர்கள், ஸ்ரீ சக்ரம்(ஸ்ரீ யந்திரம்) மற்றும் மேருவிற்க்கு பூஜை செய்கின்றனர். குறிப்பாக தேவி உபாசகர்களும், தாந்த்ரீகர்களும் ஸ்ரீ சக்ர பூஜை செய்கின்றனர்.

ஸ்ரீ சக்ரம் 1000 இதழ் தாமரையில் விளங்கும் சாட்சாத் ஆதி பராசக்தியினுடைய ரூபம் ஆகும். இதனை பிரதி தினமும் பூஜை செய்ய தேவியினுடைய அனுகிரகத்தினால் சகல மந்திர தந்திர சக்திகளும், அட்டமா சித்திகளும், ஸர்வ லோக வசியம், ராஜ வசியம், வியாபார, பொன் பொருள் விருத்தி, நவக்கிரக தோஷ நிவர்த்தி, நோய் நிவர்த்தி, பேய், பிசாசு, சத்ரு உபாதை நீங்கி சர்வ மங்கள காரியங்களும் கை கூடும் என சௌந்தர்ய லஹரியிலே ஆதி சங்கரர் கூறுகின்றார்.





ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது முக்கோணங்கள் உள்ளன, அவற்றுள் நான்கு மேல் நோக்கி உள்ளன, இவை தேவியின் சக்தியை குறிக்கின்றன. ஐந்து முக்கோணங்கள் கீழ் நோக்கி உள்ளன இவை சிவ பெருமானை குறிக்கின்றன, இவை அறிவை குறிப்பிடுகின்றன. இந்த ஒன்பது முக்கோனங்களும் இணைந்து 43 சிறு முக்கோணங்கள் உருவாகின்றன. நடுவிலுள்ள சிறு முக்கோணமே பிந்து எனப்படுகின்றது. இது சிவ சக்தி ஐக்கியத்தை குறிக்கின்றது. 43 முக்கோண்ங்களிலும் தேவதைகள் வசிக்கின்றனர். சிவ சக்தி ஐக்கியமான பிந்துவிலிருந்து சகல அண்ட சராசரங்களும் உற்பத்தியாகி வருவதை இச்சக்கரம் குறிக்கின்றது.



ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரியில் அம்மையின் இருப்பிடமாக விளங்கும் ஸ்ரீசக்ரத்தை இவ்வாறு வர்ணிக்கின்றார்,

சதுர்பி: ஸ்ரீகண்டை ஸலவயுவதிபி: பஞ்சபிரபி

பிரபின்னாபி ஸஸம் போர் நவ பிரபி மூலப்ரக்ருதிபி:

சதுஸ்சத் வாரிம் ஸ்த்வஸ"தள களாஸ்ரத்ரிவலப

த்ரி ரேகா பிஸ்ஸார்தம் தவ சரணகோணா: பரிணதா

பகவதி! சிவ வடிவமான நான்கு சிவசக்ரங்களாலும், நான்கு விதமான சிவ த்ரிகோணங்களை காட்டிலும் வேறு பட்டதான ஐந்து சக்தி சக்ரங்களாலும் ஒன்பது மூல ப்ரக்ருதிகளுடன் உம்முடைய சரணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று மேகலை, நான்கு திக்கிலும் த்வாரமுள்ள பூபுரம் மூன்றுகளோடு கூடினதாக அமைந்து 44(43) தத்வங்களாக விளங்குகின்றன.





அபிராமி அந்தாதியிலே அபிராமி பட்டரும் " ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குவதைக்   கூறுகின்றார்.

அவயவ ரூபியான அம்பிகைக்கும் யந்திர ரூபத்திலுள்ள ஸ்ரீ சக்ரத்துக்கும் அணுவளவும் பேதமில்லை. அவயவ ரூபத்தையும் யந்திர ரூபத்தையும் ஆசார நெறிகளோடு அன்பு கலந்தே உபாஸ’க்க வேண்டும்.

பல தேவி ஆலயங்களிலே ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அவற்றுள் சில :

காஞ்சி காமாஷியம்மன் ஸ்ரீ சக்ரம்

ஆதியிலே பண்டகாசுரனை அழித்து தேவர்களை பிலத்தே அம்மை காத்த போது, தேவி தானே இங்கு கோவில் கொண்டாள். தேவர்கள் அக்கோவிலை செம்பொற் கோவிலாக எடுத்தனர். பின் யுகங்களில் அது கருங்கற் கோவிலாயிற்று. பந்தகனை புதைத்த இடத்தில் ஜயஸ்தம்பம் உருவாக்கினர். ஜயச்தம்பத்திலிருந்து பிலாகாசத்துக்கு வாயில் எடுத்தனர். காயத்ரீ கதிர்கள் பரவிய எல்லைக்குள் அதன் 24 அக்ஷ்ரங்களுக்கும் ஸ்தூலமாக 24 தூண்கள் எடுத்து காயத்ரி மண்டபமாகினர். வேதங்களையே இம்மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினர். அம்பிகை ஸ்ரீ சக்ரத்தில் மூலத்ரிகோணத்தில் உறைபவளாதலால் கருவறையை முக்கோணமாக அமைத்தனர். மூன்றரை வட்ட குண்டலி¬னி சர்ப்பமாக அவள் விளங்குவதால் வெளிப் பிரகாரங்களெடுத்து விஸ்தரிக்கும் போது இக்கோவிலின் மூன்றரை சுற்றுக்கள் இருக்குமாறு அமைத்தனர்.அம்மையின் விருப்பபடி அம்மைக்கு ஸ்ரீ சக்ர பதக்கம் தந்த பரமேச்வரனே பரம புண்ய பீடமான ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் செய்தார். கோடி காமங்களை (விருப்பங்களை) நிறைவேற்றுவதாலும், தர்ம-அர்த்த-காம-மோக்ஷ்ம் என்பதில் காமத்தின் கோடியிலுள்ள மோக்ஷ்த்துக்கு இட்டுச்செல்வதாலும் இச்சக்கரம் "காம கோடி பீடம்" என பெயர் பெற்றது.இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை பின்னரே அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.

காம கோடி பீடமான இந்த ஸ்ரீ சக்ரத்தை சுற்றி தொட்டி போல் உள்ள அமைப்பில் எட்டு தேவியர் உருவம் உள்ளது. வசினி,காமேசி,மோதினி,விமலா, அருணா, ஜயனி,ஸ்ர்வேச்வரி, கௌலினி என்பதாக ஸ்ரீ சக்ரத்தின் ஸர்வரோக ஹர சக்ரத்தில் உள்ள எட்டு தேவியரே இவர்கள். தேவியின் ஆணைப்படி இந்த வாக் தேவதைகளே லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றினர்.

இச்சக்கரத்தை பற்றியுள்ள மற்றொரு கருத்து ஆதியில் பரமேச்வரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ரம் சதுர் யுகங்களில் கிருத யுகத்தில் துர்வாசராலும், த்ரேதா யுகத்தில் பரசுராமராலும், த்வாபர யுகத்தில் தௌம்ய மஹரிஷ’யாலும், கலியில் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களாலும் பொலிவூட்டப்பட்டது .ஆதி சங்கரரின் ஆப்படி ராஜ சேன மன்னன், காஞ்சி நகரையே காமாட்சி அம்மனின் கோவிலை பிந்துவாக கொண்டு (நடுவே அமைத்து) ஸ்ரீ சக்ர ரூபத்திலே கட்டினான். சங்கரர் காலத்திலே அவைதிக மதங்களிலும், வைதிக மத ஆபாஸ்ங்களிலும் மக்கள் வீழ்ந்ததால் தேவி உக்ர கோலம் கொண்டிருந்தாள். ஆசாரியார்தாம் அவளது சினத்தை சமனம் செய்தார். உக்ர கலைகளை இழுத்து இந்த காம கோடி சக்ரத்திலே அடக்கினார்! ஸெளம்ய மூர்த்தியானாள் அம்பிகை. அச்சமயத்தில், தேவி தன் உக்ர ரூபத்தில் எட்டு திக்குகளிலும் தனக்கு சேடிகளாக கொண்டிருந்த அஷ்ட காளிகளையும் பகவத் பாதர் இங்கு அகர்ஷ’த்து, ஸ்தம்பனம் செய்து ஸ்ரீ சக்ரச் சுற்று தொட்டியில் அடைத்து விட்டார் என்பர்.

திருச்சிராப்பள்ளியிலே தாயுமானவ சுவாமி திருக்கோவிலிலே மட்டுவார் குழலி அம்மையின் சன்னதியும் ஸ்ரீசக்ர வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆதி சங்கரர், கைலாயமலையில், எம்பெருமானின், திருவாயால் அருளப்பெற்ற சௌந்தர்ய லஹரியின் பாடல்களை இக்கோவிலின் சுவர்களில் எழுதச்செய்தார்.

Akilandeswari திருவாணைக்கா அகிலாண்டேஸ்வரி
காவிரிக்கரையில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரம் என்னும் திருவாணைக்கா தலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரியின் உக்ர ரூபத்தையும், ரௌத்ரத்தையும் தணிக்க ஆதி சங்கரர், ஸ்ரீசக்ரத்தையும், சிவ சக்ரத்தையும், ஸ்வர்ணத்தில் ரத்னக் கற்கள் பதித்த இரு தடாகங்களாக்கி, அம்மையின் இரு காதுகளிலும் அணிவித்தார். இன்றும் அம்மை இத்தடாகங்களுடனே நமக்கு அருள் பாலிக்கின்றாள்.



மாங்காடு காமாஷியம்மன் அர்த்த மேரு ஸ்ரீ சக்ரம்

மாங்காட்டிலே அம்மை காமாட்சி பஞ்சாக்னியிலே தவம் செய்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் சொல் கேட்டு அவரை மணக்க காஞ்சி செல்லும் போது அந்த அக்னியை அணைக்காமலே சென்று விடுகிறார். இதன் காரணமாக இதணை சுற்றி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்கமாட்டாமல் தவித்தார்கள். நிலங்கள் வற்றிப்போயின,கால் நடைகள் துன்புற்றன. அப்போது அந்தப்பக்கம் தேசாந்திரமாக வந்த ஆதி சங்கரர் லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளால் ஆன "அஷ்ட கந்தம்" அர்த்த மேரு" என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்ர யந்திரம் ராஜ யந்திரம் ஆகும். ஆமை வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற் புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீசக்ர யந்திரமும் உண்டாக்கப்பட்டுள்ளது. மூலிகைகளால் உருவானதால் ஸ்ரீசக்ரதிற்க்கு அபிஷேகம் கிடையாது, ஜவ்வாது, சந்தனம்,புனுகு சாத்தப்படுகின்றது. குங்கும அர்ச்சனை ந்டைபெறுகின்றது. மாங்காட்டிலே இந்த ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோகத்தாலான ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபுறுகின்றன. ஆனால் குங்கும அர்ச்சனை இந்த ஸ்ரீசக்ரத்துக்குத்தான்.

சங்கரன் கோயிலில் கோமதி அம்மனின் சந்நிதிக்கு முன்பு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. மன நோய உள்ளவர்களும், நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்களும், இக்கோவிலில் உள்ள நாக தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ சக்ரத்தின் முன்பே அமர்ந்து 48 நாட்கள் தியானம் செய்ய அந்த குறை நீங்கும் என்பது ஐதீகம்.


காளிகாம்பாள் அர்த்த மேரு

சென்னை காளிகாம்பாள் சன்னிதியிலும் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த மஹா மேரு யந்திரம் உள்ளது. பச்சைக்கல்லில் வடிக்கப்பட்ட நான்கடி உயரமுள்ள மேருவை திருக்குற்றாலத்தில், மௌன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி சன்னதியில் தரிசிக்கலாம். பூந்தமல்லியிலுள்ள ஆதி வைத்யநாத சுவாமி கோவிலின் உட்பிரகாரத்திலும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் பிரமராம்பிகை சன்னிதியிலும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செட்டி குளத்திலும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காசி ஹனுமான் கட்டத்திலுள்ள லிங்கத்தின் மீது ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை முத்துஸ்வாமி தீஷ’தர் பூஜித்தார். நேபாள நாட்டில் குஹ்யேஷ்வரி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மேருவின் நடுவில் அஷ்ட தள தாமரையாக மூர்த்தமாக நின்று அம்பிகை அருள் புரிகின்றாள்.


கற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும் இச்சக்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும். ஸ்ரீ சக்ரம் சகல மந்திர தந்திர சக்திகளின் பிறப்பிடத்தின் மூலமாதலால் செவ்வாயன்று பூஜை செய்ய மூன்று சக்திகள், மும்மூர்த்திகள், பஞ்ச பூதங்கள், நவ கிரகங்கள், 51 தத்வங்கள், முப்பத்து முக்கோடி தேவர்களை பூஜித்த பலன் கிட்டும் என்று திருமூலர் தனது திருமந்திரத்திலே கூறுகின்றார். நாமும் ஸ்ரீசக்ரத்தை பூஜை செய்து தேவியின் அருளை பெறுவோமாக.

*********

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal