Wednesday, October 08, 2008

விஜய தசமி ( துர்கா ஸப்தச்லோகி, துர்கா ஸுக்தம்)



திருக்கயிலாயம் விட்டு தன் மகள்கள் லக்ஷ்மி, சரஸ்வதி, மகன்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் மருமகள் அபராஜிதா உடன் சென்னை காளி பாரி கோவிலுக்கு வந்துள்ள அன்னை துர்க்கையை இந்த விஜய தசமியன்று முதலில் தரிசனம் செய்து பின் அவளது ஸ்லோகங்களை அனுபவியுங்கள் அன்பர்களே.
அப்படியே துர்க்காதேவியின் பல்வேறு அலங்காரங்களையும் காணுங்கள்.






இன்றைய தினம் விஜய தசமி, அன்னை துர்க்கை மகிஷாசூரனை வென்ற நாள். துர்கா பூஜையின் நிறை நாள் திருக்கயிலாயம் விட்டு பூலோகத்திற்கு வந்த தங்கள் மகள் ( மகளா?? இல்லை தாயை) மீண்டும் திருக்கயிலாயம் வழியனுப்புகின்றனர். பெண்கள் அனைவரும் அம்மன் உச்சியிலும் முகத்திலும் குங்குமம் இட்டுி, கன்னங்களில் சந்தனம் தடவி, இனிப்பு ஊட்டி, வெற்றிலையால் கண்ணேறு கழித்து, தாம்பூலம் கொடுத்து எப்படி தன் மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்களோ அது போல வழியனுப்புகின்றனர்.
******

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!



இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே!
மகிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
எங்களை காப்பாற்றுவாயாக.
*******


விஜய தசமியான இன்று ஸ்ரீ துர்க்கையை துதிக்க துர்க்கா சப்த ஸ்லோகி மற்றும் துர்க்கா ஸுக்தம் உரையுடன்.


ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகீ


ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், 700 மந்திரங்களாக கருதப்படுவதும் ஸப்தசதீ அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. இது உலக நன்மையை வேண்டி பாராயணத்திற்கும் சண்டீ ஹோமத்திற்கும் கையாளப்படுகின்றது. அவரவர்களுக்கு ஏற்ற முறைப்படி ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதபப்டும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இனையாக கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் "கீதை", "விஷ்ணு சகஸ்ரநாமம்", "தேவி மஹாத்மியம்", "லலிதா ஸகஸ்ரநாமம்" இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்டு ஸ்திரீ ஸ”மங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹ’மையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாய அருள் புரியட்டும்.



ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா

பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)

ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)


ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.



ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)

எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)

தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாகஉண்டாகும்.

ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே

பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)

அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.




ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா

ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்

த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்

த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி (6)

உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.



ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி

ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்

எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.


இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.


இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

* * * * * *



துர்கா ஸ•க்தம்


ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத:

ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி
: (1)

அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும். அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும், கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.

தாமக்நிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசநிம் கர்மபலேச்ஷு ஜுஷ்டாம்

துர்காம் தேவீகும் சரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: (2)

செந்தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் எரிப்பவளும், ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கர்ம பலனை கூட்டி வைப்பவளுமான துர்கா தேவியை நான் சரணமடைகின்றேன். பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.

அக்நே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந் ஸ்வஸ்திபிரதி துர்காணி விஸ்வா.

பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தநயாய ஸம்யோ: (3)

அக்னி சக்தியே போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துகளின்றும் கரையேற்றுவிக்க வேண்டும். எங்களுக்கு வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருள வேண்டும். புத்திரர்களும், பௌத்திரர்களும் அளிக்க வேண்டும்.

விஸ்வாநி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-திபர்ஷி

அக்நே அத்ரிவந் மநஸா க்ருணோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம் (4)

ஆபத்தை போக்கும் அக்னி சக்தியே கப்பல் கடலைக் கடப்பது போல எங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் எம்மை கடத்துவிப்பாய். அக்னி சக்தியே அத்ரி மஹரிஷ’யைப்போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுகிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரக்ஷ’த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.


ப்ருதநா ஜிதகும் ஸஹமாந-முக்ர-மக்னிகும் ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்

ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா-யக்நி: (5)

எதிரிகளின் சேனைகளை வெல்பதும், அடக்குவதும், உக்கிரமானவளுமான அக்னி சக்தியை பரமபதத்திலிருந்து அழைக்கின்றேன். இச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாக. அக்னி தேவன் நமது பாவங்களை போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.



ப்ரத்நோஷிக மீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி

ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்மபயம் ச சௌபகமாயஜஸ்வ (6)

அக்னியே யாகங்களில் போற்றப்பெறும் நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கர்ம பலனை அளிப்பதும் ஹோமத்தை செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படும் நீயே ஆகின்றாய். அக்னி சக்தியே உனது உடலையும் ஹவிஷ’னால் இன்புற செய்து எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வாயாக.

கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரநுஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட மபிஸம்வஸாநோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம் (7)

இந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தொடர்பின்றி பாவமான பொருட்களைக்கூட அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னை சேவிக்கின்றேன். சுவர்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகில் இருக்கும் போது பேரின்பத்திற்குரியவனாக்குதல் வேண்டும்.



ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி

தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்.

* * * * * * *


VIJAYA DASAMI


ON THIS VIJAYA DASAMI DAY MOTHER DEFEATED MAHISASURA AND THUS
GRANTED RELIEF TO THE WHOLE UNIVERSE.


THEN ALL THE CELESTIALS AND HUMANS PRAYED TO MOTHER
JAYA JAYA HEY MAHISASURA MARDHINI
RAMYA KABARDINI SAILA SUDHE


HAIL THEE , HAIL THEE, THE SLAYER OF MAHISASURA(DURGA), THE CONSORT OF LORD SHIVAWITH LOCKED MATS, DAUGHTER OF HIMAVAN.

Tuesday, October 07, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 9

நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை.
மஹா நவமி நாளான இன்று அன்னையை கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.


மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.

Saradambal in Chariot
திருத்தேரில் சாரதாம்பாள்

Mahisasuramardini Alangaram
மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

Saradambal as Durga
சாரதாம்பாள் துர்க்கா அலங்காரம்

Maha Saraswathi -2
மஹா சரஸ்வதி


Maha Saraswathi Alangaram -1
மஹா சரஸ்வதி அலங்காரம்


ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யா

ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:

சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி

Monday, October 06, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 8

மஹா அஷ்டமி என்றும் துர்க்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் எட்டாவது நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம். இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.


Durga Pooja-6
துர்க்கா பூஜை(அம்மன் படகில் செல்லும் கோலம்)

DURGA POOJA -5 Jorhat-Assam
துர்க்கா பூஜை ஜோர்காட்-அஸாம்


Rajarajeswari Alangaram -2
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


RAJARAJESWARI ALANGARAM - 1
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


SORNAMBIKA
சொர்ணாம்பிகை
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!
சமஸ்த சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றிக்கும் ஈஸ்வரியும், ஸமஸ்த சக்திகளும் கூடியவளுமான ஏ தேவி! துர்கே! எங்களை பலவித பயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ! துர்க்கா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்

மஹா அஷ்டமி நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம்.இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.

Sunday, October 05, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 7

On the Seventh day of Navarathri we worship mother as Maha Durga.


சப்தமி நாளான இன்று அன்னை ஆதி பராசக்தியை மது கைடபரை சம்ஹாரம் செய்த மஹா துர்க்கையாக வழிபடுகின்றோம். இதனால் சத்ரு பயம், தீவிணை, கெடுதிகள் விலகி இன்பம் உண்டாகும்.





Durga Pooja -4( Legend of Durga descending from Kailash is depicted)

துர்க்கா பூஜை



( துர்க்கை கைலாயத்திலிருந்து தாய் வீட்டிற்கு நவராத்திரி சமயத்தில் இறங்கி வருவதாக ஐதீகம், அந்த காட்சி இங்கு காட்டப்பட்டுள்ளது. அன்னை பல்லக்கிலே வருகின்றாள், அன்னையின் சேலை கைலாயம் வரை நீண்டுள்ளது.)





Sornambika kolu


சைதை சொர்ணாம்பிகை





Karumari Amman Alangaram-2

கருமாரி அலங்காரம்



Karumari Amman Alangaram -1


கருமாரி அலங்காரம்




Maha Lakshmi Alangaram


மஹா லக்ஷ்மி அலங்காரம்


*****



சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்துதே!

தன்னை சரணமடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களை காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டவளும், அனைவருடைய துன்பங்களை அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

Saturday, October 04, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 6

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை, அங்காள ஈஸ்வரியை, ஸ்ரீ வித்யா பீஜாக்ஷர ரூபிணியாக சாம்பரி என்ற பெயரில் வழிபடுகின்றோம்.


இன்று சஷ்டியன்று தான் வங்காளத்திலே மஹா கைலாசத்திலிருந்து, பூலோகத்திற்கு துர்க்கா தேவி இறங்கி வந்து அருள் பாலிக்கும் துர்க்கா பூஜை தொடங்குகின்றது.







Mother in Yoga nidra


அன்னை பள்ளி கொண்ட கோலம்


Meenakshi Alangaram

மதுரை மீனாக்ஷி அலங்காரம்


Maha Lakshmi Alangaram

மஹா லக்ஷ்மி அலங்காரம்



Mahalakshmi kolu


மஹா லக்ஷ்மித் தாயார் கொலு



Mahisasuramardini alangaram


மஹா துர்க்கா அலங்காரம


ஜபோ ஜல்பஷ் ஷில்பம் ஸ்கலமபி முத்ராவிரசனா
கதி: ப்ரதாக்ஷிண்ய க்ரமண மஷநாத்யாஹுதிவிதி:
பரணாம: ஸம்வேஷ: ஸுகமகில மாத்மார் பணத்ருஷா
ஸபர்யா பர்யாயஸ்தவ பவது யன்மே விலஸிதம்.



பகவதி! எனது பேச்செல்லாம் உனது ஜபமாகவும், எல்லா செயல்களும் முத்திரைகளாகவும், எனது நடை பிரதக்ஷிணமாகவும், எனது உணவு உனக்கு செய்யும் ஆஹுதியாகவும், நான் படுத்துக் கொள்வது மற்றும் எனக்கு சுகத்தை கொடுக்கக் கூடியவை எல்லாம் உனக்கு செய்யும் பூஜைகளாகவும் ஆகட்டும்.

Friday, October 03, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 5




நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் அம்பிகையை மாத்ருகா வர்ண ரூபிணியாக வணங்குகின்றோம். இவ்வாறூ சதா சக்ஷி என்று அன்னை ஆதி பரா சக்தியை ஆராதிக்க பொருளாதார துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.







Kamakshi Alangaram

காமாக்ஷி அலங்காரம்




Kamakshi performing Siva pooja (Closeup)










ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த


அன்னை ஏகம்பரியும் நீயே




அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்


அம்மை காமாட்சி யுமையே!











Kamakshi performing Siva pooja



காமாக்ஷியம்மன் கம்பா நதி கோலம்






Annapoorani Alangaram



அன்னபூரணி அலங்காரம்






Alarmelmangai kolu



பத்மாவதி தாயார் கொலு





அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்




அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.




என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்.



Thursday, October 02, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 4



நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை ஜகத் ஜனனியை சோடசாக்ஷரி என்னும் சுமங்கலிப் பெண்ணாக, சர்வ மங்கள மாங்கல்யையாக பூஜிப்பதால் கல்வி, ஞானம் பெருகும்.



MEENAKSHI ALANGARAM
சாந்த நாயகி மீனாக்ஷி அலங்காரம்

YOGESWARI ALANGARAM
அன்னை யோகேஸ்வரி அலங்காரம்
SORNAMBA KOLU
சொர்ணாம்பிகை கொலு

Mylapore Legend - Mother Parvati worshipping Shiva as Peacock.
மயிலாப்பூர் ஐதீகம்- அன்னை மயிலாக சிவ பூஜை செய்யும் கொலு
ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்
நாடி அர்சித்த நாயகியாய் நின் நாமங்களை
பாடி உருகி பரவசமாகும் அப்பாங்கு அருள்வாய்
காடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே!


Durga Pooja-3
துர்கா பூஜை

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 3





நவராத்திரியின் மூன்றாம் நாள் நாம் ஆத்தாளை , அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றோம். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.




கருமாரியம்மன்

Karumariamman




துர்கா பூஜை- 2

Durga Pooja -2






Kamakshiamman Padmasani alangaram.

திருமயிலை காமாக்ஷியம்மன் பத்மாசனி அலங்காரம்





Amba performing Siva puja at Kancheepuram அம்மை காமாக்ஷி சிவபூஜை செய்யும் கோலம்.



திருமயிலை கற்பகாம்பாள்
Thirumylai Karpakambal

On the third day of Navarathri we worship Mother as a 15 year old .

நவராத்திரியின் மூன்றாம் நாள் நாம் ஆத்தாளை , அபிராம வல்யை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றோம். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.


ஸிந்தூராரண விக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ் புரத்
தாரா நாயக ஸேகராம் ஸ்மித முகீம் ஆபீந வக்ஷோருஹாம்
பாணிப்யாம் அளி பூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம்
ஸௌம்யாம் ரத்ன கடஸ்த்த ரக்த பிப்ரதீம்
சரணாம் த்யாயேத் வந்தே பராம் அம்பிகாம்.


சிந்தூரம் போன்ற சிவந்த உடலை உடையவளும், முக்கண்ணியும், மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட கிரீடத்தில் பிரகாசிக்கும் சந்திரனை சூடியவளும், புன்சிரிப்பு தவழும் முகம் உடையவளும் தேன் போன்ற அமிர்தம் நிறைந்த ரத்தின கோப்பையை ஒரு கரத்திலும் மற்றொரு கரத்தில் செங்குவளை மலரை ஏந்தியவளும், நவநிதிகள் அடங்கிய ரத்ன கடம் கீழே இருக்க அதன் மேல் தனது சிவந்த இரண்டு திருவடிகளை ஊன்றிய நிலையில் அழகிய தோற்றம் தருபவளான அம்பிகையை தியானம் செய்ய வேண்டும்.
  • Other Articles
  • Unicode enable